Top News

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவியளிக்கும் கிழக்கு முதல்வரின் தீர்மானம் நிறைவேற்றம்



தேசிய அனர்த்தங்களின் போது கிழக்கு மக்கள் என்றும் மனிதாபிமானத்தை மறந்ததில்லை-வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமளிக்கும் பிரேரணையை முன்வைத்து கிழக்கு முதல்வர் கருத்து,

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது  தொடர்பான பிரேரணையொன்று இன்று கிழக்கு மாகாண சபை அமர்வில் முன்வைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராய இன்று கூடிய கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு  சபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி தலைமையில் இடம்பெற்றது,

இதனடிப்படையில் வௌ்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  கிழக்கு மாகாண சபையால் நிவாரணம் வழங்குவது தொடர்பான பிரேரணையை கொண்டு வந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதன் போது உரையாற்றினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,
எமது நாட்டை அண்மையில் உலுக்கிய வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் என்பன நாட்டின் அண்மித்த வரலாற்றில் ஏற்பட்ட பாரியதொரு பேரழிவாகவே கருத முடியும்,

இதன் போது ஏற்பட்ட உயிரிழப்புக்களும் சேதங்களும் எமது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலுமுள்ள மக்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது.பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளும்,கர்ப்பிணத் தாய்மார்களும்,பள்ளி சென்ற சிறார்களும்,முதியோர்கள் என பாரபட்டசமின்றி நூறுக்கணக்கான உயிர்கள் இந்த அனர்த்தத்தின் போது காவு கொள்ளப்பட்டன.

யாரும் நினைத்திராா சந்தரப்பத்தில் தென் மேல் பருவப் பெயர்ச்சி மழையினால் பல ஆறுகளின் நீர் மட்டம் அசாதாரணமாக அதிகரித்து கணப்பொழுதிகள் பல உயிர்களை காவு கொண்டது,

கடந்த மே மாதம் 26 ஆம் திகதி தேசிய இடர்முகாமைத்து நிலையத்தின் முற்பகல் நேர தரவுகளின் படி 25 பேர் உயிரிழந்து 42 பேர் காணாமல் போயிருந்தனர்,அதே தினம் மாலை வேளையில் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் 91 பேர் உயிரழந்திருந்துடன் 110 பேர் காணாமல் போயிருந்தனர்,

அத்துடன் பல பகுதிகளில் 300 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சியும் பதிவாகியிருந்தன.

கடந்த  24 மணித்தியாலத்துக்குரிய தேசிய இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையின் பிரகாரம் 206 பேர் உயிரழந்துள்ளதுடன் 92 பேர் காணாமல் போயுள்ளனர்,
அதில் இரத்தினபுரி மாவட்டத்தில் 85 பேரும்,களுத்துறை மாவட்டத்தில் 63 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 31 பேரும் மற்றும் காலியில் 15 பேரும் உயிரழந்துள்ளனர்.

அது மாத்திரமன்றி களுத்துறையில் மாத்திரம் 51 பேரும் இரத்தினபுரியில் 26 பேரும் காணாமல் போயுள்ளனர்,
அது மாத்திரமன்றி 6 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வௌ்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேசத்தின்  சக சகோதரர்களாக நாமும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவையுள்ளது ,

கிழக்கு மாகாண மக்கள் சுனாமி மற்றும்  வௌ்ளம் போன்ற அனர்த்தங்களால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்டிருந்த போது எமக்கு எமது நாட்டின் சக மக்கள் உதவிக்கரம் நீட்டியிருந்தார்கள்,
ஆகவே கிழக்கு மக்களும் தேசிய அனர்த்த நிலைமைகளின் போது மனிதாபிமானத்தை மறந்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து எமது மக்களுக்கு நாம் உதவ முன்வந்துள்ளோம்,
ஆகவே கிழக்கு மாகாண சபை வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு  10.6 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதியை திரட்டுவதற்கு தீர்மானித்துள்ளோம்,

இதையடுத்து கிழக்கு மாகாண சபையினால் இந்தப் பிரேரணை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் குறித்த  10.6 மில்லியன் ரூபாவுக்கு அதிக நிதியை திரட்டி  அதனை எவ்வாறு மக்களுக்கு வழங்குவது என்பது தொடர்பில் விரைவில் தீர்மானிக்கவுள்ளதாகஎ கிழக்கு முதலமைச்சர் கூறினார்

Post a Comment

Previous Post Next Post