(எஸ்.எம்.அறூஸ்)
கல்முனையைச் சேர்ந்த அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும்,முன்னாள் மாவட்ட சாரண ஆணையாருமான எம்.ஐ.எம் முஸ்தபா காலமானார்.இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருந்த மர்ஹூம் எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்கள் விளையாட்டு வீரராக, போட்டி நடுவராக, ஆசிரியராக, விரிவுரையாளராக, சாரண ஆணையாளராக, சிரேஸ்ட ஊடகவியலாளராக, விளையாட்டுத்துதுறை ஆலோசகராக கடமை புரிந்ததவர்.
தனது நீண்ட கால பணிகளுக்காக தேசிய விருதுகள் பலவற்றையும் பெற்றிருந்த முஸ்தபா சேர் பெருமையில்லாத மனிதராவார். கிழக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறை அடையாளமாக இவரைப் பார்க்கலாம். அந்த அளவிற்கு தேசியத்தில் இந்த மாகாணத்தின் பெயரைத் பதியவைத்தவர். எல்லோருடனும் அன்பாகப் பழகும் முஸ்தபா அவர்கள் காலமான செய்தி கேட்டு பலரும் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதுடன் அவருக்காக பிரார்த்தனையும் செய்துள்ளனர்.
இலங்கை வானொலி வர்த்தக சேவையின் ( தென்றல்) விளையாட்டரங்கில் இவர் எழுதிய தொடர் கட்டுரைகள் என் போன்ற பலரையும் அவரது ரசிகர்களாகவே மாற்றியது. 1992ம் ஆண்டுகளில் முஷ்தபா சேரின் விளையாட்டுக் கட்டுரைகளையும், செய்திகளையும் கேட்பதற்காக புதன்கிழமைகளில் மாலை 3.45 மணிக்கு இடம்பெறும் விளையாட்டரங்கு நிகழ்ச்சிக்காக வானொலி அருகில் அமர்ந்து கொள்வோம்.
இவரது எழுத்தாக்கம்தான் என்னையும் இலங்கை வானொலிக்கு எழுதத் தூண்டியது என்றால் அது மிகையாகாது. நூற்றுக்கணக்கான விளையாட்டாசிரியர்களையும்,ஆயி ரக்கணக்கான சாரண மாணவர்களையும் உருவாக்கிய ஒரு ஆசானாக முஸ்தபா வரலாற்றில் பதியப்பட்டுள்ளார்.
வானொலியில் அவரது பெயரைக் கேட்டிருந்தபோதும் நேரடியாக நான் அவரைச் சந்தித்ததில்லை. முதன் முதலாக அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் முஸ்தபா அவர்கள் மத்தியஸ்தராக கடமையாற்றினார். அந்த சந்தர்ப்பத்தில் அவரை சந்தித்தேன்.
மிகவும் அற்புதமான முறையில் நடுவர் பணியைச் செய்தார். போட்டியிட்ட இரண்டு அணி வீரா்களையும் விட மத்தியஸ்தம் வகித்த முஸ்தபாவின் எடுப்பே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அன்றிலிருந்து முஸ்தபா சேரைப்பற்றிய ஈடுபாடு என்னுள் இன்னும் அதிகமானது. நான் பாட்சாலை மாணவராக இருந்ததால் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக அவருக்கு கைலாகு கொடுத்துவிட்டு வெளியேறினேன்.
பின்னர் அட்டாளைச்சேனை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளில் நான் தொடர்ந்தும் பங்குபற்றி வந்ததால் என்னைப்பற்றி அறிந்து கொண்டதுடன் 1996ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை வானொலியில் நானும் தொடர்ந்தும் விளையாட்டுச் செய்திகளை எழுதினேன். அதனால் என்னை அழைத்து என்னை உற்சாகப்படுத்தியதுடன் விளையாட்டுத்துறை வரலாறுகளையும் சொல்லித்தந்தார்.
2001ம் ஆண்டு நான் நவமணி பத்திரிகையில் முஸ்தபா அவர்களை நேர்முகம் கண்டேன். அந்த நேர்முகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுடன் எனக்கும் பத்திரிகைத்துறையில் நல்லதொரு இடத்தைத் தந்தது. அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு என்னை வருமாறு எனது வீட்டுத் தொலைபேசிக்கு அழைப்பினை எடுத்துச் சொல்லுவார். அங்கு சென்றதும் கல்லூரிச் செய்தி மட்டுமல்ல தேசிய ரீதியிலான செய்திகளைக்கூட டைப் செய்து வைத்திருப்பார்.
எனது விளையாட்டுத்துறை செய்தி சேகரிப்பில் நல்லதொரு ஆலோசகராக இருந்து வழிகாட்டிய முஸ்தபா சேரின் காலமான செய்தி கேட்டதும் மிகுந்த கவலையடைந்தேன். இவரிடம் கற்ற ஆசிரியர்கள் நாட்டின் நாலா பகுதிகளிலும் கற்பிக்கின்றனர். அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இவரிடம் கற்ற ஆசிரிய மாணவர்கள் முஸ்தபா சேரின் கற்பித்தலை ஒரு போதும் மறக்க மாட்டார்கள்.
அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி அணி தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் தேசிய கல்விக் கல்லூரிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் சம்பியானாக வருவதற்கு முஸ்தபா அவர்களின் பயிற்சியே காரணமாக அமைந்தது.
கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் ஆசிரியராகவும், உப அதிபராகவும் கடமையாற்றிய முஸ்தபா அவர்கள் பின்னர் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லுரியில் இனைந்து கொண்டு விரிவுரையாளராக கடமை கடமை புரிந்ததுடன் இறுதியில் சிரேஸ்ட விரிவுரையாளராக ஓய்வு பெற்றுச் சென்றார்.
ஓய்வு பெற்றதும் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பகுதி நேர உடற்கல்வி விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
உதைபந்தாட்ட வீரராக, மத்தியஸ்தராக இலங்கை உதைபந்தாட்டத்துறைக்கு ஆற்றிய பணிக்காக எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்கள் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் பாராட்டி பொற்கிழி வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இது கிழக்கு மாகாணத்திற்கும் குறிப்பாக அம்பாரை மாவட்டத்திற்கும் பெருமை தந்த விடயமாகும். அத்தோடு சாரணியத்துறையில் ஆற்றிய பணிக்காக தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார்.
கல்முனை பற்றிமாக் கல்லூரி மற்றும் வெஸ்லிக் கல்லூரிகளின் பழைய மாணவரான மர்ஹூம் எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்களுக்கு திருமணம் முடித்து ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவரது விளையாட்டுத்துறை ஈடுபாடுகளுக்கு இவரது மனைவியின் ஒத்துழைப்பும்,ஆதரவும் பெரும் உந்து சக்தியாக இருந்ததாக பல தடவைகள் அவரே பல நிகழ்வுகளில் கூறியுள்ளார்.
கல்முனையைச் சேர்ந்த மர்ஹூம்களான முகம்மட் இஸ்மாயில், ஆசியா தம்பதிகளின் மூத்த புதல்வரான முஸ்தபா அவர்களுக்கு ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் உள்ளனர்.
மட்டக்களப்பு வெபர் மைாதனத்தில் உதைபந்தாட்டப் போட்டி ஒன்று இடம்பெற்றபோது அப்போட்டிக்கு பிரதம மத்தியஸ்தராக முஸ்தபா அவர்கள் கடமையாற்றியுள்ளார். இதற்கு பிரதம அதிதியாக வெபர் அடிகளார் கலந்து கொண்டுள்ளார். போட்டி முடிவில் உரையாற்றிய வெபர் அடிகளார் கிழக்கு மாகாணத்தில் உதைபந்தாட்டம் செத்துவிட்டது என்று நினைத்திருந்தேன். ஆனால் முஸ்தபாவின் மத்தியஸ்தத்தைப் பார்த்தபோதுதான் தெரிகின்றது கிழக்கில் இன்னும் உதைபந்தாட்டம் சாகவில்லை என்று பேசிய விடயம் முஸ்தபாவின் திறமைக்கு இதைவிட சான்று தேவையில்லை என்பதை பறைசாற்றியது.
கல்வி மற்றும் விளையாட்டு,சாரணியத் துறைகளுக்கு அப்பால் உடகத்துறையுடனும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வீரகேசரிப் பத்திரிகையில் தென்கிழக்கு பிராந்திய செய்தியாளராக கடமையாற்றியதுடன் மக்களது குறைபாடுகளையும், பிரச்சினைகளையும் உடனுக்குடன் கொண்டு வந்தவர்.
அன்றைய காலகட்டத்தில் செய்திகளையும் படங்களையும் பத்திரிகைக்கு அனுப்புவதில் உள்ள கஸ்டங்களையும்.சவால்களையும் என்னிடம் பலமுறை சொல்லி அவரது அனுபவத்தை பகிர்ந்து கொண்டவர்.
இப்படி பல்வேறு துறைகளில் ஆளுமையுள்ளவராக இப்பிராந்தியத்தில் தடம்பதித்த எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரது குற்றங் குறைகள் மன்னிக்கப்பட்டு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்கப் பிரார்த்திப்போம்.இவரது ஜனாஸா நல்லடக்கம் கல்முனை கடற்கரை பள்ளி மையவாடியில் இன்று புதன்கிழமை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
Post a Comment