பாறுக் ஷிஹான்
நாட்டில் கடந்தவருடம் ஏற்பட்ட வறட்சியால் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை(31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது, கடந்த வருடம் மழைவீழ்ச்சி குறைவடைந்ததன் விளைவாக வேலணை, ஊர்காவற்துறை, காரைநகர், மருதங்கேணி மற்றும் கடற்கரையை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த சுமார் 33 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரச அதிபர் வேதநாயகன் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 6 புதிய குடிநீர் தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, சாரதிகளுக்குரிய எரிபொருள் மற்றும் நிதியும் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் தென்பகுதியில் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை யாழ்.மாவட்ட செயலகம் ஆரம்பித்துள்ளதாகவும் தம்மோடு இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர் மாவட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி உதவுமாறும் கேட்டு கொண்டுள்ளார்