கட்டார் நாட்டுடன் சவூதி அரேபியா உட்பட ஐந்து அரபு நாடுகள் இராஜதந்திர உறவுகளை முறித்துள்ளன. அமெரிக்காவுக்கு ஆதரவான, எண்ணை வளம் நிறைந்த, பணக்கார வளைகுடா நாடுகளுக்கு இடையிலான திடீர் இராஜதந்திர நெருக்கடிக்கு காரணம் என்ன?
கட்டாரின் ஒரேயொரு நிலத்தொடர்பு சவூதி அரேபியாவுடன் மட்டுமே என்பதால், அந்நாட்டில் இருந்து இறக்குமதியான உணவுப் பொருட்களுக்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. அதை அடுத்து, சூப்பர் மார்க்கெட்டுகளில் இருப்பதையெல்லாம் மக்கள் வாங்கி விட்டதால் அவை வெறுமையாகக் கிடக்கின்றன.
"கட்டார் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளிக்கிறது" என்ற குற்றச்சாட்டை சுமத்தியே சவூதி அரேபியா தொடர்பை முறித்துக் கொண்டது. அதை அடுத்து குவைத், ஐ.அ.எமிரேட்ஸ், பாஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளும் இராஜதந்திர உறவை துண்டித்துக் கொண்டன.
இதற்கு சொல்லப் படும் காரணம் வேடிக்கையானது. கட்டார் அதிபரின் இணையத்தளத்தில், ஹமாஸ், ஹிஸ்புல்லா, முஸ்லிம் சகோதரத்துவம் போன்ற இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப் பட்டிருந்ததாக சவூதி அரேபியாவில் காரணம் சொல்லப் படுகின்றது.
இது உண்மையில் அடுப்பு சட்டியைப் பார்த்து கருப்பு என்று பழித்தது போன்றது. பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவும் நாடுகளில் சவூதி அரேபியா முன்னுக்கு நிற்கிறது. அவ்விரண்டு நாடுகளும், சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்திற்கு நிதி, ஆயுத உதவிகள் வழங்கி இருந்தன. உலகில் வேறு பல இயக்கங்களுக்கும் அவை இரண்டும் சேர்ந்து உதவி செய்துள்ளன.
(சவூதி அரேபியாவின் பரம வைரியான) ஈரானின் ஆதரவு பெற்ற "பயங்கரவாத இயக்கங்களுக்கு", கட்டார் உதவி செய்தது என்று சவூதி குற்றம் சாட்டுகின்றது. யேமனில் நடக்கும் போரில் சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டமைப்பில் இருந்து கட்டார் வீரர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்.
வளைகுடா நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அமெரிக்காவுக்கு தலையிடியாக இருக்கப் போகின்றது. ஏனெனில் கட்டாரில் அமெரிக்காவின் மிகப் பெரிய படைத்தளம் உள்ளது. அதன் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையில், கட்டார் ஈரானுடன் நெருங்குவதாக அமெரிக்கா சந்தேகப் படுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஒபாமா நிர்வாகம் நடந்த காலத்திலேயே, கட்டாருக்கான ஆயுத விநியோகத்திற்கு தடை போடப் பட்டிருந்தது.
கட்டார் தொடர்பான இராஜதந்திர நெருக்கடிக்கு இன்னொரு காரணமும் சொல்லப் படுகின்றது. பிரிட்டனில் தேர்தல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், லண்டனில் நடந்த தாக்குதல் கடும்போக்கு வலதுசாரி கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு சாதகமாக அமையும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்தக் கட்சியின் மீதான கண்டனங்கள் அதிகரித்தன.
தேர்தல் பிரச்சாரக் காலத்தில், சவூதி அரேபியாவுக்கு ஆயுத விற்பனை செய்வதை தெரேசா மே அம்மையார் நியாயப் படுத்தி வந்தார். தற்போது எதிர்க்கட்சிகள் அதை வைத்தே திருப்பித் தாக்குகின்றன.
லண்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகாவது, பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் சவூதி அரேபியாவுடனான தொடர்புகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்று, லேபர் கட்சியும், லிபரல் ஜனநாயகக் கட்சியும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆயுத பெற ஊழல் தொடர்பான ஆவணங்களை பகிரங்கப் படுத்த வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.
பல தசாப்த காலமாக, சவூதி அரேபியாவிற்கான பெருமளவில் ஆயுதங்களை ஏற்றுமதி நாடாக பிரித்தானியா இருந்து வருகின்றது. கொலைக்கருவிகளின் ஏற்றுமதியால் பெருமளவு அந்நிய செலாவணி கிடைக்கிறது. (இல்லாவிட்டால் பிரிட்டன் ஒரு பணக்கார நாடாக இருக்க முடியுமா?) ஆகவே, எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக, இரகசிய ஆயுத பேரம் தொடர்பான ஆவணங்களை கையளிப்பதற்கு கன்சர்வேட்டிவ் கட்சி முன்வருமா என்பது சந்தேகத்திற்குரியது.
இந்தப் பின்னணியில் பார்க்கும் பொழுது, கட்டாருடனான இராஜதந்திர நெருக்கடிக்கான காரணம் புரியும். கட்டார் "பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவுகின்றது" என்று சவூதி அரேபியா குற்றம் சுமத்திய காரணம் புரியும். அதாவது, "கட்டார் மட்டுமே குற்றவாளி" என்று சுட்டிக் காட்டி விட்டு, சவூதி அரேபியா நல்ல பிள்ளைக்கு நடிக்கிறது. தன்னோடு கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்த சிறிய திருடனை காட்டிக் கொடுத்து விட்டு, பெரிய திருடன் தப்பிக் கொள்வதைப் போன்றது. முப்பது வருடங்களுக்கு முன்னர் ஈராக்கில் சதாம் ஹுசைனுக்கு நடந்த கதியும் அதே தான்.
இதற்கிடையில், உலக சந்தையில் எண்ணை விலை உயர்ந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும். கடந்த ஐந்தாண்டு காலமாக படு வேகமாக சரிவடைந்து வந்த எண்ணை விலை, பல்வேறு பொருளாதார இழப்புகளுக்கும் காரணமாக அமைந்திருந்தது. எண்ணை வள ஒபெக் நாடுகளின் பொருளாதார நலன்களுக்காக கட்டார் பலி கொடுக்கப் பட்டிருக்கலாம்.
தொண்ணூறுகளுக்கு முன்னர், சோவியத் யூனியன் என்ற "கம்யூனிசப் பூதம்" இருந்த படியால், அமெரிக்கர்களும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஒன்று சேர்ந்து ஆப்கான் போரில் "தீய சக்திக்கு" எதிராக போரிட்டார்கள். சோவியத் யூனியன் வீழ்ந்து "கம்யூனிசப் பூதத்தின் அச்சுறுத்தல்" மறைந்த பின்னர், அவர்கள் தமக்குள் முரண்பட்டு சண்டையிடத் தொடங்கினார்கள்.
தற்கால உலக மக்கள் இஸ்லாமிய- பயங்கரவாத பீதியூட்டப் பட்டு, ஊடகங்களால் மூளைச் சலவை செய்யப் படுகின்றனர். "பயங்கரவாத எதிர்ப்புப் போர்" என்ற போர்வையின் கீழ் ஆயுத விற்பனை அமோகமாக நடக்கிறது. பல கோடி இலாபம் வருமானம் தரும் வியாபாரத்தில் ஊழல்கள் நடப்பது சர்வசாதாரணம். இதற்கிடையே எண்ணை விலையை வைத்து சூதாடும் வணிகர்களுக்கும் பஞ்சமில்லை.
"முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் பிரயாணிகளுக்கு விசா தடை விதித்து" உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அண்மையில் தான் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்து சொந்தம் கொண்டாடினார். முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை கூட்டி வைத்துக் கொண்டு "பயங்கரவாதத்தை இந்தப் பூமியில் இருந்து துடைத்தழிப்போம்" என்று சூளுரைத்தார். இந்த வாய்ச் சவடால் எல்லாம் ஆயுத விற்பனைக்காகத் தான் என்பது தெரிந்த விடயம்.
Post a Comment