முஜீப் இப்றாஹிம்
ஐ. நா சபைக்கான கட்டார் நாட்டின் முன்னாள் தூதுவர் அனாயாசமாக அல்ஜஸீராவோடு பேசிக்கொண்டிருக்கிறார்....
தனது நாடு நெருக்கடிக்கு இலக்காகி இருப்பதாக எந்த சலனமும் அவரது முகத்தில் இல்லை...
"கட்டார் ஒரு இறைமையுள்ள தேசம். அது தனது கொள்கைகளை அண்டை தேசங்களுடனான உறவுகளை சுயாதீனமாக செய்ய வல்லது" உறுதி படக்கூறுகிறார்.
GCC எனப்படுகிற வளைகுடா தேசங்களின் அமைப்பின் கொள்கைகளோடு இயைந்து போகிற அதே வேளை தனது தேசம் தனக்கேயுரிய சுயாதிபத்தியத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காது என்றும் சொல்கிறார்!
தமது வீட்டில் இளவு விழுந்தது போல கட்டார் பற்றிய கவலை மேகங்களால் பலரும் சூழ்ந்திருக்க தனது காலில் முள்ளுக்குத்திய அளவு வலியை கூட அவர் வெளிக்காட்டவில்லை!
அரபுகளுக்கேயுரிய தைரியமும், இறைவன் மீதான உறுதியான நம்பிக்கையும் அவரது உரையாடலில் தெறித்தன.....
மறுபுரம் கட்டாரின் வெளியுறவு அமைச்சர் இந்த திடீர் முடிவுகளுக்கான காரணங்களை தெளிவாக தன்னால் அறியமுடியாதுள்ளது என்கிறார்!
கட்டாரிற்கு என்னதான் நடந்தது?
1. அரபு வசந்தம் துளிர் விட்ட போதும் கட்டார் பேசு பொருளாகியது.
அரபு வசந்தம் வளைகுடாவெங்கும் பரவி அதன் இறுதி இலக்கை அடையவேண்டுமென்பதில் கட்டார் கடும் ஆர்வங்கொண்டிருந்தது.
அதற்காக பல வழிகளில் பங்காற்றியது. அரச மற்றும் அல்ஜஸீராவை போன்ற ஊடகங்களை கூட அரபு வசந்த எழுச்சிக்கு ஆதரவாக பயன்படுத்தியது!
2. இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கமென அறியப்படும் ( Islamic brotherhood) இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தோடு நெருங்கிய தொடர்புகளை பேணுகின்றமை.
முர்சி அரசிற்கு சவுதி உட்பட பல அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதும் கட்டார் ஆதரவாய் நின்றது!
3. பலஸ்தீன் விவகாரத்தில் ஹமாஸிற்கு ஆதரவும் அடைக்கலமும் கொடுக்கும் செயற்பாடுகள்.
காஸா கடுமையான முற்றுகைக்கு இலக்கான போது கட்டார் மன்னர் களத்திற்கு சென்று ஆறுதல் கூறிய நிகழ்வு.
4. ஈரானுடன் வாயு பரிமாற்ற ஆலைகளை பகிர்ந்து கொண்டமையும் ராஜதந்திர நெருக்கமும்.
யெமனில் சவுதியுடன் இணைந்து ஹூதிகளுக்கு (ஷீயாக்கள்) எதிராக கட்டார் போரிடுகிற போதும் கட்டாரின் ஈரானுடனான உறவு சவுதிக்கு நீண்டகால எரிச்சலை உண்டுபண்ண காரணமாகியது.
5. சிரியாவில் புரட்சிக்குழுக்களுக்கு கட்டார் ஆயுதங்களை வழங்குகின்றது என்ற குற்றச்சாட்டுகள்.
இவ்வாறான பல்வேறுபட்ட காரணங்கள்தான் சவுதி தலைமையிலான அரபு நாடுகளின் இந்த திடீர் தடை முடிவின் பின்னணியில் உள்ளதாக நோக்கர்கள் சொல்கிறார்கள்.
இந்த பிரச்சினைகள் நீண்டகாலமாக நீறுபூத்த நெருப்பு போல கன்ன்று கொண்டிருந்தாலும் அண்மைய அமெரிக்க ஜனாதிபதியில் மத்திய கிழக்கு விஜயமானது சவுதி தலைமையிலான இந்த முடிவிற்கு எண்ணெய் ஊற்றிவிட்டதாக அறியமுடிகிறது....
ஈரானுக்கெதிராக சுன்னிகள் அணிதிரளவேண்டும், பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலமும் ஆதரவும் அளிக்கும் கட்டார் போன்ற நாடுகள் மீது சுன்னி தேசங்கள் கவனங்கொள்ள வேண்டும் என்பன போன்ற சாராம்சங்கள் அடங்கிய உரையொன்றை ரியாதில் ட்ரம்ப் ஆற்றி உள்ளார்.
கூடவே குறித்த நாடுகளின் தலைவர்களுக்கும் இந்த நஞ்சூசியை தந்திரமாக ஏற்றிவிடுகிற பணியிலும் தனது பயணத்தில் வெற்றியும் கண்டுள்ளார் மே 21 ம் திகதி தனது நண்பன் என விழித்த கட்டார் மன்னரை நெருக்கடிக்குள் ஆளாக்கும் சகுனி ஆட்டத்தை அதே சபையில் கன கச்சிதமாக நிறைவேற்றி வெறும் இரண்டு வாரங்களுக்குள் மத்திய கிழக்கில் இந்த புரளி வெடித்திருக்கிறது!
வான் மற்றும் கடல் பரப்புகளின் தடை பொருளாதார ரீதியாக கட்டாருக்கு பல பாதகங்களை தரவல்லவை என்பது உண்மை.
ஐக்கிய அரபு ராச்சியத்தின் ஜபல் அலி துறை முகத்தை தனது அலுமினிய பெரு ஏற்றுமதிக்கான தளமாக கட்டார் உபயோகித்து வந்தது.
அது போல உணவு மற்றும் ஏனைய பொருட்களுக்கான வினியோக பாதையாக சவுதி இருந்தது.
இப்போது மாற்றீடுகளை கட்டார் நாடியுள்ளது.
அதற்கு உதவ துருக்கி, சீனா, ஈரான் ஆகிய பலமான நாடுகள் அடங்கலாக பல்வேறு தேசங்கள் முன்வந்துள்ளன.
குவைத் மன்னர் நிலமைகளை தணிப்பதற்கான பேச்சுவார்த்தை ஒன்றிற்காக இன்று சவுதி பயணமாகிறார்.
துருக்கி அதிபர் சவுதி மன்னரோடு தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்த பிரச்சினையானது பாடசாலையில் சட்டாம்பிள்ளை (Prefect ) சக மாணவனை தண்டிப்பது போலவும், மூத்த அண்ணன் கடை நிலை தம்பியை கடிந்து கொள்வது போலவுமான நிகழ்வுகளை ஒத்த பின்னணியை கொண்டது.
அமெரிக்க வலையில் தொடர்ந்தும் வீழ்ந்து விடாமல் கொஞ்சம் சுயமாக சிந்தித்தால் இவர்கள் அனைவரும் விரைவில் இந்த சிக்கலில் இருந்து வெளியில் வருவார்கள்!
2.2 மில்லியன் மக்களை கடந்த இருநூறு வருடங்களாக ஆட்சிசெய்கிற பரம்பரையில் வந்திருக்கும் தற்போதைய கட்டார் மன்னர் வினைத்திறன் மிக்கவர்! தற்துணிவு கொண்டவர்!
தடைகளை தகர்த்து இறைவனுடைய உதவியோடு தனது தேசத்தை மேலுயர்த்துவார் என்ற நம்பிக்கை எனக்குள் உண்டு!
Post a Comment