Top News

நிவாரண பணிக்கு வியங்கல்லை சென்ற ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்



களுத்துறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் பணிப்பின் பேரில் அரசசார்பற்ற நிறுவனமொன்றுடன் இணைந்து வெள்ள நிவாரணப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊடகவியலாளரொருவருக்கு வியங்கல்லை பிரதேசத்தில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வியங்கல்லை பிரதேசத்தில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பேருவளை நபவிய்யா இளைஞர் இயக்கத்தினராலேயே மேற்படி ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதோடு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் ஊடகவியலாளின் கையிலிருந்த கெமராவை பறித்து அதிலிருந்த புகைப்படங்களையும் பலவந்தமாக அழித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த அரசசார்பற்ற நிறுவனத்தினால் பலாந்தை மற்றும் வியங்கல்லை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும், சமைத்த உணவுகளும் வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலையில் பலாந்தையில் நிவாரணப் பணிகளை நிறைவுசெய்துவிட்டு மாலையில் வியங்கல்லையில் இப்தாருக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கு தயாரிக்கொண்டிருந்தபோதே ஊடகவியலாளர் மீது நபவிய்யா இளைஞர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பேருவளை நபவிய்யா இளைஞர்களினால் வியங்கல்லை பள்ளிவாசலில் கஞ்சி விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருந்ததை குறித்த ஊடகவியலாளர் படம் பிடித்ததினாலேயே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தாக்குதல் நடத்தியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பள்ளிவாசலில் பகிரங்கமாக ஊடகவியலாளர் மீது கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையின் பின்னர் அரசசார்பற்ற நிறுவனத்தினால் கொண்டுசெல்லப்பட்ட உணவுப் பொதிகளையும் விநியோகிப்பதற்கு நபவியா இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஊர் மக்களின் நன்மை கருதி சில பிரதேசவாசிகளின் தலையீட்டினால் வேறு ஒரு இடத்தில் உணவுப் பொதிகளை விநியோகித்துவிட்டு ஊடகவியலாளரும், அரசசார்பற்ற நிறுவனத்தினரும் வெளியேறியுள்ளனர்.
குறித்த அரசசார்பற்ற நிறுவனம் வியங்கல்லை பிரதேசத்தில் பாரிய நிவாரண பணிகளை மேற்கொள்ள வருகை தந்ததாகவும், இச்சம்பவத்தின் பின்னர் ஏமாற்றத்தோடு வியங்கல்லையிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வெள்ளத்தினால் சொத்துக்களையும், தொழில்களையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள வியங்கல்லை மக்கள் கிடைக்கப்பெறவிருந்த பாரிய நிவாரணங்களை இழந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன், களுத்துறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் பஹ்ஜி மற்றும் வியங்கல்லை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை என்பன இச்சம்பவத்தை கண்டித்துள்ளன

Post a Comment

Previous Post Next Post