Top News

நடுவானில் பறந்தபோது சீன விமானத்தின் என்ஜினில் ஓட்டை




சீனாவை சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவன பயணிகள் விமானம் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு சென்றது. அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சீனாவின் ஷாங்காய் நகருக்கு புறப்பட்டது.

ஏ-330 ஏர்பஸ் வகையை சேர்ந்த இந்த விமானத்தில் 265 பயணிகள் இருந்தனர். சிட்னியில் இருந்து புறப்பட்டு விமானம் 70 கிலோ மீட்டர் தூரம் சென்றிருந்தது. அப்போது இடதுபுற என்ஜினில் திடீரென ஓட்டை விழுந்தது. இதனால் பயங்கரமாக சத்தம் கேட்டது. ஏதோ தீப்பற்றி எரிவது போன்ற வாசனையும் வீசியது. பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே விமானத்தில் அவசர நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டது. பயணிகள் அனைவரும் ‘சீட் பெல்ட்’ அணியும்படி உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து விமானத்தை மீண்டும் சிட்னி விமான நிலையத்திற்கு திருப்பினார்கள். பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் காயமின்றி தப்பினார்கள். விமான இடதுபுற என்ஜினில் விசிறி சுற்றும் இடத்தில் பெரிய அளவில் ஓட்டை விழுந்திருந்தது தெரியவந்திருந்தது. அந்த ஓட்டை எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை.

விமானம் புறப்பட்டபோது அந்த என்ஜின் பகுதி நன்றாகத்தான் இருந்துள்ளது. விமானம் ஓடுதளத்தில் பாய்ந்து பறந்தபோது ஏதோ ஒரு மர்ம பொருள் விமானத்தை தாக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. அது என்ஜினில் பட்டு ஓட்டை ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்ததால் விமானத்தை மீண்டும் பத்திரமாக திருப்பி தரையிறக்கிவிட்டனர். வெகுதூரம் சென்றதற்கு பிறகு இதுபோன்று ஏற்பட்டு இருந்தால் அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி இருக்கும். அதிர்ஷ்டவசமாக அப்படி சம்பவம் எதுவும் நடைபெறாமல் பயணிகள் தப்பிவிட்டனர்.

Post a Comment

Previous Post Next Post