துபாயில் முழுவதும் ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய போக்குவரத்து விதிகளும், அபராதங்களும் நடைமுறைக்கு வந்துள்ளன. இதில் துபையில் மட்டும் 1,279 பேர் மீது போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக துபை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் மிக அதிகமாக 208 பேர் மீது போக்குவரத்திற்கு இடையூறாக வாகனத்தை ஓட்டிய குற்றமும், அடுத்து 125 பேர் மீது தடம் மாறிய குற்றமும், 3 வதாக 98 பேர் மீது சட்டவிரோத பார்க்கிங் செய்த குற்றத்திற்காகவும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
400 திர்ஹம் அபராதத்துடன் 4 கரும்புள்ளிகளை பெற்றுத்தரும் புதிய விதிகளின் கீழ் அனைத்து பயணிகளும் பெல்ட் அணிந்து பயணிப்பதை உறுதி செய்வது ஓட்டுனரின் கடமையாகும். அதேபோல் 10 வயதிற்கு கீழ் வயதுள்ள குழந்தைகளை காரின் முன்புறம் ஏற்றுவதும், கார் சீட்டின் பின்புறம் குழந்தைகளுக்கான சிறப்பு இருக்கையை பொருத்தாமல் இருப்பதும் டிரைவர் தலையில் விடியும் குற்றங்களாகும்.
வாகனத்தை இயக்கும் போது மொபைலில் பேசிய 56 பேர் மீதும், கவனம் சிதறிய நிலையில் பொடுபோக்குடன் வண்டியை செலுத்திய 9 பேர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதற்காக ஓட்டுனர்கள் 800 திர்ஹம் அபராதத்துடன் 4 கரும்புள்ளிகளையும் பெறுவர்.
கார் கண்ணாடிகளின் மீது ஒட்டப்படும் நிழலுக்கான டின்ட் பிலிம்களின் (Tint Film) அடர்தன்மை 30 லிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மேலும் அடர்த்தியுள்ள டின்ட் பிலிம்களை ஒட்டினால் 1,500 திர்ஹம் மட்டுமே அபராதமாம்.
அளவுக்கு அதிக வேகத்தில் சென்று ரேடார் கேமிராக்களில் சிக்கியோரின் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. அனுமதிக்கப்பட்ட அளவை விட மணிக்கு கூடுதலாக செல்லும் 20 Km/Ph எனும் கருணை வேகம் இன்னும் நீக்கப்படவில்லை. உதாரணத்திற்கு 120 Km/Ph வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்ட சாலையில் 141 Km/Ph வேகத்தில் செல்லும் போது தான் ரேடார் கேமிராவில் சிக்க நேரிடுமாம்.
Post a Comment