மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விஜயத்தின் போது கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கோரிக்கைக்கு இணங்க 55 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதுடன் சில திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30 ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளன.
இந்த நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவர் இரா,சம்பந்தன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம்,சுகாதார போஷணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா,முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
ஏறாவூரில் 120 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நகர சபைக் கட்டடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இதன் போது திறந்து வைக்கப்படவுள்ளது.
அத்துடன் ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மர்ஹும் அஷ்ரப் வாசிகசாலை மற்றும் கலாசார மண்டபத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணத்திற்கான அடிக்கல்லும் இதன் போது நடப்படவுள்ளதுடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சைக் கட்டடத் தொகுதி நிர்மாணத்திற்கான அடிக்கல்லும் இதன் போது நடப்படவுள்ளன.
மேலும் ஏறாவூரின் வாவிக்கரை பூங்காவை அண்மித்த பகுதியில் 100 மில்லியன் ரூபா செலவில் அமையப்பெறவுள்ள சுற்றுலா தகவல் மையம் மற்றும் சுற்றுலாத் தளத்திற்கான அடிக்கல் நடப்படவுள்ளது,
அத்துடன் ஆரையம்பதியில் 100மில்லியன் ரூபா செலவில் அமையப்பெறவுள்ள சுற்றுலாத் தகவல் மையம் மற்றும் வர்த்தகக் கட்டட தொகுதிக்கான அடிக்கல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நடப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஆரையம்பதியில் அமையவுள்ள சுற்றுலாத் தொகுதியில் பயிற்சி மையங்கள் மற்றும் கலாசார மையங்களும் இதில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது,
Post a Comment