கிழக்கின் நிரந்தர அபிவிருத்திக்கும் இன ஐக்கியத்தை கட்டியெழுப்பவும் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித பொகொல்லாகமவுடன் இணைந்து செயற்பட கிழக்கு மாகாண சபை தயார் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்,
அத்துடன் இரு நிர்வாகங்களும் இணைந்து சுமுகமாகவும் ஒற்றுமையாகவும் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கை கட்டியெழுப்புவது இலகுவான விடயம் என்பதில் ஐயமில்லை.
ரோஹித போகொல்லாகம அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் பல பயனுள்ள வெளிநாட்டு முதலீடுகளை நம் நாட்டிற்கு கொண்டு வந்து நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியவர் என்பதை நாம் அறிவோம்
கிழக்கில் வெளிநாட்டு முதலீடுகளுடன் மாகாண சபை முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு புதிய ஆளுனர் மேலும் வலு சேர்ப்பார் என்பதுடன் அவருடன் இணைந்து மென்மேலும் கிழக்கிற்கு பல பயனுள்ள முதலீடுகளைக் கொண்டு வந்து கிழக்கில் தற்போது பிரதான பிரச்சினைகளாகவுள்ள வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நம்முடன் இணைந்து செயற்படுவதற்கும் நாம் தயாராகவுள்ளோம்,
அத்துடன் கிழக்கில் மூவினத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று கிழக்கிலும் இன முறுகலை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயன்று வருகின்றன,
இவ்வாறான சூழ்நிலையில் இன மத பேதங்களுக்கு அப்பால் செயற்பட்ட சிறந்த அரசியல்வாதி என மக்களால் அழைக்கப்படும் ரோஹித போகொல்லாகம ஆளுனராக நியமிக்கப்படுள்ளமை கிழக்கில் மென்மேலும் இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தயும் வலுப்படுத்த வழிவகுக்கும் என நம்புகின்றேன்,
அத்துடன் கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் இன்னும் முழுமையான அபிவிருத்தியை அடையவில்லை,
காணாமல் போனோர் பிரச்சினை,பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பின்மை மற்றும் யுத்தத்தால் விதவைகளாக்கப்பட்டோர் போன்ற பல தரப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வுகள் இதுவரை முழுமையாக கிடைக்கப் பெறவில்லை,எனவே இவர்களுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க கிழக்கு மாகாண சபை முன்னெடுக்கும் பயணத்தில் புதிய ஆளுனர் எமக்கு உறுதுணையாக இருப்பார் என எதிர்பார்க்கின்றோம்,
அத்துடன் ஒரு தேர்ந்த அனுபவமிக்க ஒரு சிறந்த அரசியல் நிர்வாகத்திறனுடைய சிவில் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை ஆளுநராக நியமித்துள்ளமை தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு கிழக்கு மாகாண மக்கள் சார்பாக எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
முன்னாள் ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ அவர்கள் ஆளுனராக கடமையாற்றிய காலத்தில் நாம் முன்னெடுத்த நல்ல பல மக்கள் நலன் சார் திட்டங்களுக்கு எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்ததுடன் ஒரு சிறந்த தேர்ந்த நிர்வாகத்திறனுடையவராக எமக்கு பல ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்,
அத்துடன் பட்டதாரிகள் தொடர்பான பிரச்சினை மற்றும் கிழக்கில் நிர்வாக ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் தோன்றிய போதிலும் மிகவும் இராஜதந்திரமாகவும் நீதியாகவும் அவற்றைத் தீர்க்கவும் அவர் எடுத்த முயற்சிகள் என்றும் பாராட்டத்தக்கவை,
கிழக்கு மக்கள் மீது மிகுந்த அக்கறையுடன் செயற்பட்ட முன்னாள் ஆளுனர் தற்போதைய ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஒஸ்ரின் பெர்ணான்டோவுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்தும் அவர் கிழக்கு மக்களின் அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை வழங்குவார் என்றும் நாம் நம்புகின்றோம்,
Post a Comment