தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார பிரதி அமைச்சர் துலிப் விஜேசேகரவினால் பயன்படுத்தப்பட்டு மீண்டும் அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட பிராடோ ரக ஜீப் வண்டியில் இருந்து இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட மைக்ரோ வகை கைத்துப்பாக்கி ஒன்றும் கைக்குண்டொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சருக்கு அரசாங்கத்தினால் புதிய வாகனம் ஒன்று வழங்கப்பட்டதன் பின்னர் அவரிடமிருந்த வாகனங்களில் ஒன்றை அரசாங்கத்துக்கு மீள ஒப்படைத்துள்ளார். இந்த வாகனத்திலேயே இந்த ஆயுதங்கள் இருந்துள்ளதாக அமைச்சர் ஹலீம் கூறியுள்ளார்.
பிரதி அமைச்சரினால், தபால் சேவை அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்ட வாகனம் பின்னர் நிதி அமைச்சிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சில் வாகனத்தைப் பரிசோதனை செய்யும் போதே வாகனத்தின் மறைவான இடமொன்றிலிருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பிரதி அமைச்சர் தனது வாகனத்தை தபால் அமைச்சிடம் ஒப்படைத்தவுடன் அதன் புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்காக தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்னரேயே நிதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தபால் துறை மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் மேலும் கூறியுள்ளார்.
இருப்பினும், முஸ்லிம் சமய விவகார பிரதி அமைச்சர் துலிப் விஜேசேகர இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment