Top News

தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையை பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டது நீதிமன்றம்



ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொது பல சேனாவினால் பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு இன்று (19.07.2017) கொழும்பு, புதுக்கடை நீதி மன்றத்தில் மீண்டும் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் ஆற்றிய ஓர் உரையில், பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்று கூறி பொது பல சேனா சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 

குறித்த உரையில் புத்தர் தொடர்பில் சகோ. அப்துர் ராசிக் கூறிய கருத்து தவறுதலாக சொல்லப்பட்டது. திட்டமிட்டு பேசப்பட்டது அல்ல என்பதை உரை நிகழ்த்தப்பட்டு ஒரு சில நாட்களுக்குள்ளாகவே ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் ஜமாஅத் சார்பில் பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டது.

ஜமாஅத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து இது பற்றி ஒவ்வொரு தவனையிலும் ஜமாஅத்தின் சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தே வந்தனர்.

இன்றைய வழக்கிலும் குறித்த பிரச்சினை பற்றிய விசாரனையில் “புத்தர் பற்றிய குறித்த பேச்சு வசனம், தவறுதலாக இடம் பெற்ற ஒன்றாகும். இது தொடர்பில் நாம் ஏற்கனவே பல தடவைகள் நீதி மன்றத்திலும் விளக்கம் தந்து விட்டோம். தவறுதலாக சொல்லப்பட்டது என்பதை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டு குறித்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்ற கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி பண்டார அவர்கள் “தாம் கூறிய குறித்த வார்த்தை தவறுதலாக இடம் பெற்றது என்று, அவர்களை தமது தவரை ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில் வழக்கை தொடர்ந்து நடத்திச் செல்வது தேவையற்றது. குற்றம் சுமத்தப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் தரப்பினர் புத்தர் பற்றிய பேசியது தவறுதலாக நடைபெற்ற ஒன்று என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சட்டமா அதிபர் உத்தரவிட நீதி மன்றம் கோருவதாக சட்டமா அதிபருக்கு பொலிஸ் தரப்பினால் கடிதம் ஒன்றை உடனடியாக அனுப்புமாறு பொலிஸ் தரப்பினருக்கு இன்னு உத்தரவிட்டார்”.

சிரேஷ்ட சட்டத்தரணிகளான மைத்ரி குணரத்த, சிராஸ் நூர்தீன் ஆகியோருடன் சட்டத்தரணிகளான நுஸ்ரா ஸருக், அன்ஜலோ பெனடிக், வசீம் அக்ரம், ரசீன் சுலைமான், மற்றும் இஸ்மாயீல் முஹம்மத் ஆகியோர் அடங்கிய குழுவினர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மன்றில் ஆஜராகினர்.

கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் குறித்த வழக்கில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

-ஊடக பிரிவு,
தவ்ஹீத் ஜமாத் (SLTJ)

Post a Comment

Previous Post Next Post