1.
வினைத்திறன் கொண்ட பள்ளி நிருவாக சபைகள்
உருவாக்கப்படல்.
2.
வாராந்த ஜும்மா, சொற்பொழிவுகள் மற்றும் பொது
அறிவிப்புகள்.
3.
ஊரின் சனத்தொகை கணிப்பீடு.
4.
ஊரில் இயங்கும் தொண்டர் அமைப்புகளுடன் பள்ளி
நிருவாகத்தின் தொடர்புகள்.
5.
நூலகம் / விளையாட்டு மைதானம் போன்றவற்றின்
அவசியம்.
6.
கல்வி தொடர்பான கருத்தரங்குகள் / பரீட்சை
வழிகாட்டிகள் என்பனவற்றின் அவசியம்.
7.
யுவதிகள் மற்றும் பெண்களிற்கான விழிப்புணர்வு
மற்றும் வழிகாட்டல்கள்.
இலங்கை என்ற நாட்டிற்கு
சொந்தக்காரர்களாகிய நாம் இஸ்லாம் மதத்தினை வழி மொழிந்தவர்களாக எமது உலக வாழ்க்கைப்
பயணத்தில் நிறைவுகளை அடைந்துள்ளோமா? என்று பின்னோக்கிப் பார்த்தால் இல்லை என்ற விடையே
கிடைக்கும். இன்றைய உலக அரங்கில் எமது அமைதியும் பொடுபோக்கும் முஸ்லிம்களாகிய நாம்
பலதரப்பட்ட சவால்களை எதிர் கொண்டுள்ளதை தினமும் காணுகின்றோம். எமது இஸ்லாமிய கோற்பாடு
எம்மை தூய்மையான மனிதனாக சுவர்க்கத்தில் நுழையச் செய்வதற்கான அனைத்து படிகளையும் தெளிவாக
சொல்லியிருந்தாலும், அதை நாம் அலட்சியமாக பார்த்ததன் விளைவு இன்று உலக அரங்கில் நாம்
தீவிரவாதியாகவும், முடக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றோம். இலங்கையர் நாங்களும் இதற்கு
விதிவிலக்கல்ல. நாட்டில் தொடரும் அனைத்துப் பிரச்சினைகளிற்கும் எமது மார்க்கமும் அதை
பின்பற்றும் நாங்களுமே காரணம் என்ற போக்கில் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப் பட்டுக்கொண்டிருக்கின்றன.
நமது அடிப்படையின்
தெளிவும், தூய்மையும் இல்லாமல் போன காரணத்தினால், சிறையில் இல்லாமல் வெளியில் இருந்தும்
தீர்ப்பு வழங்கப்பட்ட குற்றவாளிகளாக இருக்கின்றோம். இவைகளின் தொடர்ச்சி காலப்போக்கில்
சரிசெய்யப்படுமா? எமது சந்ததிகளின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விகளை முன்வைத்தால்,
அதற்கான விடை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன் என்று வாய்மொழியக்கூடிய நிலையில் உள்ளோம்.
இவ்வாறு பல சிக்கல்களை
எதிர்கொண்டுள்ள நாங்கள் எவ்வாறு இதிலிருந்து மீள்வது? ஒவ்வொரு ஊரிலும் இதற்கான முயற்சிகளை
எவ்வாறு தொடங்கலாம், நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம் எவ்வாறு எம்மை தயார்படுத்த வேண்டும்
என்பதற்கு கீழே குறிப்பிட்டுள்ள சில ஆயத்தங்களை செய்யலாம் என்று நினைக்கின்றேன்.
1. வினைத்திறன்
கொண்ட பள்ளி நிருவாக சபைகள் உருவாக்கப்படல்.
எமது அனைத்து செயற்பாடுகளையும்
பள்ளிகளின் நிருவாக கட்டமைப்பிற்கு உற்பட்டதாக மாற்றப்படுவது அவசியமாகும். இஸ்லாமிய
சட்டத்திட்டம் ஒவ்வொரு ஊரிலும் நிறுவப்படுவதற்கும், அதற்கான வழிகாட்டல்களுடன் தொடர்வதற்கும்
எமது பள்ளி பரிபாலன சபைகள் விழித்துக்கொள்ள வேண்டும். எமது ஊர்களில் ஒவ்வொரு பள்ளிவாயல்கள்
நிருவாக உறுப்பினர்கள் அப் பொறுப்பிற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பது மிக
அவசியமாகும். தலைவர் முதல் உறுப்பினர்கள் அனைவரும் ஊர் மக்களினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டவர்களாகவும்,
மார்க்க விடயங்களில் மட்டுமல்லாது, சமூகத்தின் மீது மிக கரிசனை உடையவர்களாகவும், சொல்
செயல் திறன்களில் நேர்மையுடனும், சவால்களையும் பிரச்சினைகளையும், சரியான கோணத்தில்
கையாளக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுதல்
சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல்
பல ஜும்மா பள்ளிகளை கொண்டுள்ள பிரதேசங்களும், ஊர்களும் உள்ளன. இப்பள்ளிகளில் நிருவாக
சபைகள் தமது கொள்கைகளையும், வேற்றுமைகளையும் முன்னிறுத்தாமல் ஊரின் வளர்ச்சியிற்கு
தங்களின் நிருவாக அமைப்பின் மூலம் இப்பணிகளை தொடர்வதினால் மட்டுமே வினைத்திறனான பயன்களை
எமது சமூகம் இவ்வுலகிலும், மறுமையிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
இப்பதிவு யாரையும்
தனிப்பட்ட முறையில் குறைகாண்பதற்கோ அல்லது அவர்களை விமர்சிப்பதற்கோ அல்ல, மாறாக கீழே
குறிப்பிடப்பட்டுள்ள முன்னெடுப்புகளிற்கு இப்படியான நிருவாக சபை பெரிதும் பக்கபலமாக
இருக்கும். இப் பரிபாலனசபை குறிப்பிட்ட கால எல்லையை கொண்டதாகவும், அதில் சரியான முறையில்
திட்டமிடல்கள், நிகழ்ச்சி நிரல்கள் அமைக்கப்பட்டு அதை நோக்கி நகர்தல் பயனளிக்கும்.
2. வாராந்த
ஜும்மா, சொற்பொழிவுகள் மற்றும் பொது அறிவிப்புகள்.
ஒவ்வொரு வாரமும்
வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறுகின்ற ஜும்மா சொற்பொழிவானது எங்களின் ஒரு சிறந்த ஊடகமாகும்.
மனிதர்களாகிய எங்களிற்கு அறிவுரை சொல்வதற்கும், பாவங்களிலிருந்து விடுபடுவதற்கும் மட்டுமல்லாது
பல முக்கியமான விடயங்களை ஜும்மா சொற்பொழிவுகள் மூலம் முன்னெடுக்கலாம்.
சொற்பொழிவுகள்
நிகழ்த்தப்படும் தலைப்பு காலத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும், சொற்பொழிவு நிகழ்த்தக்கூடிய
உலமாக்களின் அறிவு, அனுபவம் மீள்பரிசீலனை செய்யப்படுவது மிக அவசியமாகும். காரணம் இச்
சொற்பொழிவு முஸ்லிம்களாகிய எங்களிற்கு மட்டுமல்லாது ஊரில் வாழக்கூடிய மாற்று மத சகோதரர்களிற்கும்
இதன் மூலம் நிகழ்வுகளின் உண்மைத்தன்மையையும், பிரயோசனமான செய்திகளையும் தெரியப்படுத்துவதன்
அவசியம் இருக்கின்றது. எனவே பிரச்சாரம் செய்யக்கூடிய உலமாக்கள் மார்க்க விடயங்களில்
மட்டுமல்லாது உலக அன்றாட விடயங்கள், அரசியல், விஞ்ஞானம் போன்ற பல துறைகளை கற்றுத்தேர்ந்தவர்களாக
அல்லது அது பற்றிய சரியான தெளிவுடன் இருப்பது மிக அவசியமாகும். அதேபோல் சலிப்பும் வெறுப்பும்
இல்லாமல் மக்களின் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி சொற்பொழிவுகளை நிகழ்த்தக்கூடிய பேச்சுத்திறன்,
அறிவாற்றல், பல மொழித்திறன் இருப்பது அவசியமாகும். இது போன்ற சிறந்த உலமாக்களை, மௌலவிமார்களை
உருவாக்குவதற்கான செயற்த்திட்டங்கள், பாடத்திட்டங்கள் மதரஸாக்களில் சிறந்த முறையில்
ஆரம்பிக்கப்பட வேண்டும். தேர்ச்சி பெற்ற உலமாக்களை எமது ஊர்களிலும் சொற்பொழிவுகளை நடாத்த
ஏற்பாடுகளை பள்ளி நிருவாகம் சிரமம் பாராது முன்னெடுக்கவேண்டும். பிரசங்கத்தின் தலைப்பு,
உரையாற்றுபவரின் பெயர் விபரங்கள் முன்கூட்டியே பள்ளி அறிவிப்புப்பலகையில் காட்சிப்படுத்தப்பட்ட
வேண்டும்.
எல்லா ஊர்களையும்
ஒப்பீட்டு நோக்கினால் அதிகமான சொற்பொழிவுகள் தமிழ் மொழியில் மட்டுமே நிகழ்த்தப்படுகின்றன
என்பது கவலையான விடயம். இலங்கையை பொறுத்தவரையில் முஸ்லிம்களாகிய எங்களில் பலரும் சிங்கள
மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாகவே இருக்கின்றோம். சிங்கள மொழியை குறைந்தது சரளமாக பேசக்கூடிய
அல்லது விளங்கக்கூடிய மக்களாகவே நாங்கள் அனைவரும் இருக்கின்றோம். எமது ஊர்கள் பெரும்பாலும்
மாற்றுமத மக்கள் செறிந்து வாழக்கூடிய பிரதேசங்களில் சேர்ந்து வாழக்கூடிய கட்டமைப்பையே
கொண்டுள்ளோம். ஆகவே எமது ஜும்மா மற்றுமுள்ள மார்க்க சொற்பொழிவுகள் சிங்கள மொழியிலும்
நிகழ்த்தப்படுவது காலத்தின் தேவையாகும். அதேபோல் பள்ளியினால் விடுக்கப்படும் அறிவிப்புகள்
(ஜனாஸா/ பொது அறிவிப்புகள்) கட்டாயம் சிங்கள மொழியிலும் அறிவிப்பு செய்யப்படுவது சிறந்ததாகும்.
இங்கு நாம் சிங்கள
மொழியில் உரை நிகழ்த்துவது என்பது அவர்கள் மீது நாங்கள் பயம் கொண்டுள்ளோம் என்பது தவறான
கருத்தாகும். அம் மக்களிற்கு நாம் எமது மார்க்கத்தை புரிய வைக்காமல் அவர்களை திட்டுவது
உகந்ததல்ல. மாறாக எமக்கு கிடைக்கும் இதுபோன்ற பொதுவான சந்தர்ப்பங்களில் முடிந்தவரை
எமது மார்க்கத்தை அவர்களிற்கு புரியும் விதத்தில் எத்திவைப்போம். நமது இயக்கங்களிற்கிடையில்
நாம் செய்து கொள்ளும் கொள்கைப் பிரகடனங்கள், விவாதங்கள் போன்றவைகளைவிட மாற்று மததத்தவர்களிற்கு
எமது வாழ்வியல் சித்தாந்தங்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகும்.
பல்லின மக்கள்
வாழும் பிரதேசமாகவும், நாடாகவும் இருக்கும் நாம் எல்லா மத மக்களையும் நேசிக்கவும் பழகவும்
கடமைப்பட்டுள்ளோம், எமக்கும் அவர்களிற்கும் உள்ள இன ஒற்றுமையையும் மத வேற்றுமையையும்
சரியாக புரிந்தவர்களாக எமது முன்னெடுப்புகள் இருக்கவேண்டும். அவர்களுடன் கலந்து போனாலும்
கரைந்து போகாமல் இருக்க வேண்டிய அடிப்படையை சரியாக பிரித்து அறியப்படாமை பல சிக்கல்களை
தோற்றுவிக்கின்றன. இதற்கான விளக்கங்களும் எமது உலமாக்களினால் அனைத்து தரப்பு மக்களிற்கும்
எடுத்துச் சொல்லப்படவேண்டும்.
3. ஊரின்
சனத்தொகை கணிப்பீடு.
முஸ்லீம்கள் நாம்
வாழக்கூடிய ஊர்களில், பள்ளி நிர்வாகங்களினூடாக ஊரின் சனத்தொகை கணக்கீடு செய்யப்படுதல்
ஒரு முக்கிய அம்சமாகும். தற்போது பள்ளி நிருவாக்கங்கள் ஊர் மக்களிடம் இருந்து சந்தா
அறவிடுவதற்கு மாத்திரமே வீடுகளின் விலாசங்களையும் வீட்டுத் தலைவரின் பெயரையும் திரட்டி
வைத்துள்ளார்கள். இது சந்தாவிற்கு மட்டுமாக இல்லாது ஒவ்வொரு ஊர்களிலுமுள்ள குடும்பங்களின்
எண்ணிக்கை, உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவர்களின் தொழில், வியாபாரம், மற்றும் ஒவ்வொரு
துறை சார்ந்தவர்களினதும் கணிப்பீடு என்பன திரட்டப்பட்டு உள்ளடக்கப்பட வேண்டும். இத்
தரவுகள் பள்ளி நிருவாகத்தின் மேற்பார்வையில் இருக்கலாம், அதேபோல் வருடாந்தம் இத் தரவுகள்
ஊரின் நிலவரத்துடன் ஒப்பீடு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட வேண்டும்.
இவ்வாறு நாம் சேகரிக்கும்
தகவல்கள், ஊரினால் அல்லது அமைப்புகளினால் முன்னெடுக்கப்படும் விடயங்களிற்கு பக்கபலமாகவும்,
உதவியாகவும் இருக்கும்.
4. ஊரில்
இயங்கும் தொண்டர் அமைப்புகளுடன் பள்ளி நிருவாகத்தின் தொடர்புகள்.
எமது ஊர்களை பொறுத்தவரையில்
பல தொண்டு மற்றும் இளைஞர் சம்பந்தப்பட்ட அமைப்புகள் / இயக்கங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
இவைகள் ஒரு வரையறைக்கு உற்பட்டவர்களாக தம்மால் ஆனா முயற்சிகளையும், உதவிகளையும் ஊர்
மக்களிற்கு செய்துவருகின்றார்கள். இவ் இயக்கங்கள் ஊரின் அபிவிருத்தி, கல்வி வழிகாட்டல்,
சுயதொழில் ஊக்குவிப்பு, வறிய குடும்பங்களிற்கு/ மாணவர்களிற்கு உதவுதல் போன்ற பல நற்காரியங்களை
நேரடியாகவோ அல்லது திரைக்குப்பின்னால் செய்து கொண்டிருப்பார்கள். இதனால் எத்தனையோ குடும்பங்கள்,
இளைஞர் யுவதிகள், சிறுவர்கள் பயனடைகின்றனர். தமது வேலைகளையும், நேரங்களையும் பாராது தம்மால் முடிந்த
உதவிகளை செய்யும் இவ் இயக்கங்கள் பாராட்டப்பட வேண்டும். இவர்கள் பற்றிய விபரங்களை பள்ளி
நிருவாகங்கள் அறிந்திருப்பது சிறந்தது. அதேபோல் ஒரு சிறப்பான நிருவாகத்தை பள்ளி பரிபாலன
சபை கொண்டிருக்கும் போது இவ்வாறான இயக்கங்களிற்கு தேவையான உதவிகள்/ ஒத்தாசைகள் பள்ளி
நிருவாக்கங்களினூடாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு ஊரிலும்
இருக்கும் தனவந்தர்கள், வெவ்வேறு துறைகளில் சாதித்தவர்களின் ஒத்துழைப்பு அவ்வூரின்
அபிவிருத்தியிற்கு முக்கியமானதாகும். இவர்களை பள்ளி நிருவாகத்தினூடாக
அணுகுதல், அவர்களின் மூலம் உதவிகளை பெற்று ஊரின் அபிவிருத்தியிற்கு மற்றும் தொண்டு
நிறுவனங்களிற்கு பங்களிப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்.
5. கல்வி
தொடர்பான கருத்தரங்குகள் / பரீட்சை வழிகாட்டிகள் என்பனவற்றின் அவசியம்.
எமது நாட்டில்
பின்தங்கிய மாவட்டங்களாகவும், நகர்ப்புற வசதிகளை இலகுவில் அடைந்து கொள்ள முடியாமலும்
எத்தனையோ ஊர்கள் உள்ளன. இங்கு வாழும் மக்களிற்கு கிடைக்கக்கூடிய பாடசாலைக் கல்வி மட்டுமே
எல்லாப் பிரதேசங்களையும் போன்று கிடைக்கப்பெறுகின்றன. இருந்த போதும், வாழும் ஊரின்
சூழல், பாடசாலையில் உள்ள வளங்களை ஒப்பீட்டு நோக்கினால், இப் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள
மாணவர்களிற்கு கிடைக்கும் கல்வித்தரம் குறைவானதே. இதன் அடிப்படையிலேதான் 5ம் ஆண்டு
புலமைப்பரீட்சை, உயர்தர Z-score ஆகிய வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள.
இதுவே நமது பின் தங்கிய பிரதேசங்களின் மற்றும் வசதி குறைந்த ஊர்களின் கல்வியின் நிலைப்பாட்டை
பிரதிபலிக்கின்றன. இந்நிலையில் அரசாங்கத்தின் மூலம் இவ்வாறான பிரதேசங்களை வலுப்படுத்துவது
என்பது கடினமான காரியமாகும் என்றே கூறலாம். எமது சமூகத்தின் வளர்ச்சியினை அதிகரிக்க
வேண்டும் என்று என்னும் நாங்கள் எமது நாட்டின் அரசாங்கத்தின் உதவிகளை முழுவதுமாக தங்கியிருப்பது
பயனளிக்காது.
இதற்கு பல காரணிகளாக
நாட்டின் பொருளாதாரம், கடன், அரசியல்வாதிகளின் ஊழல், அரச ஊழியர்களின் பொடுபோக்கு என்று
பல விடயங்களை குறிப்பிடலாம். இங்கே குறிப்பிடும் பிழையான நபர்களின் எண்ணிக்கை அதிகளவில்
இருப்பதே இதற்கு மூல காரணம், மாறாக எனது பதிவு அனைவரையும் குறிப்பிடாது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
இதற்கு தீர்வு
காணும் வகையில் நாம் எமது பிரதேசங்களில் உள்ள மாணவ மாணவிகளிற்கான கல்விக்கூடங்களை நிறுவுதல்,
வகுப்புரீதியாக அல்லது வயதுரீதியான கருத்தரங்குகள், பரீட்சை வழிகாட்டிகள் போன்ற விடயங்களை
தொடரவேண்டும். பாடசாலை மூலமாக நடைபெறும் இதர கல்விசார் (உதாரணமாக: பேச்சு, கட்டுரை,
விஞ்ஞான, விளையாட்டு) திட்டங்களில் இவர்களை ஊக்கப்படுத்துவதும், பங்குபெறச்செய்வதும்
அவசியமாகும். அதேபோல் தொழில்வாய்ப்புகள், அரசியல், சமூகவியல், பொதுஅறிவு, உளவியல் சம்பந்தமான
கருத்தரங்குகளும், வழிகாட்டல்களும் இன்றியமையாத விடயங்களாகும்.இவைகள் பணத்தை நோக்கமாக
கொண்டிருக்காமல், வறிய மற்றும் எல்லாத்தரப்பு மாணவர்களையும் வழிகாட்டுவதாக அமையவேண்டும்.
6. நூலகம்
/ விளையாட்டு மைதானம் போன்றவற்றின் அவசியம்.
ஒவ்வொரு ஊரிலுமுள்ள
எமது சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகளை வழிநடாத்தல்/ ஊக்கப்படுத்துதல் அவசியமாகும்.
இவர்களின் சிறந்த வாழ்க்கைக்கு குடும்பம், பாடசாலை, சுற்றுப்புறச்ச சூழல், பள்ளி என்பன
பிரதான காரணிகளாகும். எனவே அவர்களை வழிதவறவிடாமல் ஒரு நிலைப்படுத்தல், திறமைக்கு ஆக்க
பூர்வமான முறையில், இஸ்லாமிய கோர்பார்ட்டிற்கு கட்டுப்பட்டவர்களாகவும், ஒழுக்க விழுமியங்களை
பேணுதலாக கடைபிடிக்கக்கூடியவர்காளாகவும் வளர்க்க ஒவ்வொரு ஊரும் முன் வரவேண்டும். இவர்களில்
மறைந்துள்ள கல்வி மற்றும் ஏனைய துறைசார்ந்த திறமைகளை இனங்கண்டு அதற்கான ஆயத்தங்களை
எடுப்பது நமது ஊரின் முன்னெடுப்புகளிலேயே தங்கியுள்ளது.
அதற்காக ஒவ்வொரு
ஊர்களிலும் பொது நூலகங்கள், விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் தடாகங்கள்,
தற்காப்புக்கலை போன்ற வெவ்வேறு துறைசார்ந்த விடயங்கள் ஆரம்பிப்பதும், நடத்துவதும்,
அதன் மூலம் பயிற்சிகள் வழங்குவதும் மிக அவசியமாகும். இவ்வாறான வளங்களை அதிகரிப்பதன்
மூலம் விடைகிடைக்கும் என்று என்னுகிறேன். இவைகள் நமக்கு சிரமமாக இருப்பது போன்று தோன்றினாலும்,
எம் அனைவரது ஒத்துழைப்புடன் இதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வது எமது எண்ணங்களை பூர்த்தியாக்கும்
இன்ஷா அல்லாஹ். இஸ்லாமிய வரையறைக்கு உற்பட்டதாக இவ்வாறான பல நல்ல பொது விடயங்களை ஒவ்வொரு
ஊரிலும் வளரும் சிறுவர்கள், இளைஞர் யுவதிகளுக்கு கிடைக்கச்செய்வதினால் அவர்களில் மறைந்துள்ள
திறமைகளை இனங்கானவோ அல்லது அவைகளை வளர்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக்கொடுக்கலாம்.
இளைஞர்களிற்கு போன்றே எமது ஊர்களில் வாழும் யுவதிகளிற்கும் இவ்வாறான வளங்களை உபயோகிப்பதற்கு,
பரீட்ச்சித்துப்பார்ப்பதற்கும் அவகாசங்கள் வழங்கப்பட வேண்டும். அவர்களது அறிவு, ஆரோக்கியம்,
திறமை என்பன அவர்களிற்கு மட்டுமல்லாது நாளை உருவாகும் குடும்பங்களினதும், பிள்ளைகளின்
எதிர்காலத்திற்கு இன்றியமையாதது.
7. யுவதிகள்
மற்றும் பெண்களிற்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்கள்.
ஆண்களை பொறுத்தவரையில்
கல்வி மற்றும் ஏனைய துறைகள் சார்ந்த அறிவையும் அனுபவத்தையும் பெற்றுக்கொள்வதற்கான சூழல்
அதிகமாக உள்ள நிலையில் எமது வீடுகளிலுள்ள பெண்கள், யுவதிகள் தொடர்பான விடயங்களில் நாம்
மிக சிரத்தையுடன் பல முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியுள்ளோம். இந்த காலகட்டத்திலும்
அவர்கள் பெண்கள் தானே என்று அவர்களிற்குரிய எந்த விதமான முன்னெடுப்புகளையும், அறிவையும்
வழங்காமை குடும்பமாக மட்டுமல்லாது பல சமூக நிலை அவலங்களிற்கு ஆளாகின்றோம். ஏராளமான
தரப்பிலுள்ள பெண்கள் எமது ஊர்களில் இருக்கின்றார்கள். குடும்ப வறுமையினால் பாதிக்கப்பட்டவர்கள்,
பாடசாலைக்கு கல்வியில் பிரகாசிக்காதவர்கள், சாதாரண தரத்தின் பின் பாடசாலைக் கல்வியினை
தொடராதவர்கள், இளவயதில் விதவையானவர்கள், வயது வந்தும் திருமணமாகாத பெண்கள் போன்று பலதரப்பிலும்
உள்ள பெண்களை நாம் உடல் மற்றும் உளவியல் ரீதியாக முடக்கிப்போட்டுள்ளோம் என்பதே வேதனை
கலந்த உண்மை.
கிணற்றுத்தவளைகள்
போல் பெண்களை பூட்டிவைத்துவிட்டு, நாம் விடியதலைத்தேடுவது கடைசிவரைக்கும் கனவாகவே கழியும்
என்பதுவே உண்மை. இன்றைய உலகில் எத்தனையோ பெண்கள் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த ஆளுமைகளாகவும்,
உலக சரித்திரத்தை தமது முயற்சிகளினால் எட்டிப்பிடிப்பவர்களாகவும் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள்
என்பது எமக்கு தெரியும். இது போன்ற பெண்கள் எமது சமூகத்திலும் உருவாக வேண்டும். அவர்கள்
நாளைய தாய்மார்கள். அவர்களின் அறிவு, ஞானம், அனுபவம் சிறந்த தலைமுறைகளை உருவாக்க கடமைப்பட்டுள்ளதை
ஏன் நாம் மறந்துவிட்டோம்?
எமது இஸ்லாமிய
மார்க்கத்திற்கு உற்பட்டதாக ஆண்களை மட்டுமல்ல பெண்கள் அவர்களையும் வழிநடாத்த வேண்டிய
கட்டாயத்தில் இருக்கின்றோம். இதற்கு எமது ஊர்களில் பெண்களிற்கு மேலே நான் குறிப்பிட்ட
இதர வளங்களை கிடைக்கக்கூடியதாக மாற்ற வேண்டும். அதேபோல் இஸ்லாமிய கல்விக்கூடங்கள் நிறுவப்பட
வேண்டும். இவைகள் தாம் உள்ள கொள்கைகளை முன்னெடுப்பதற்காக அன்றி இஸ்லாமிய அடிப்படைக்
கோற்பாடுகள், சட்ட திட்டங்கள், சித்தாந்தங்களை தெளிவாக அவர்களுக்கு வழங்குவதுடன், உலக
அரசியல், பொது அறிவு, உளவியல் மற்றும் ஒழுக்க விழுமியங்களை புகட்டும் நிலையங்களாக மாற
வேண்டும். மேலே குறிப்பிட்டது போன்று வறிய
மற்றும் எல்லா தரப்பிலுமுள்ள பெண்களிற்குமான நிதி சார்ந்த மற்றும் ஏனைய உதவிகள் செய்யக்கூடிய
அமைப்புகள், திட்டங்கள், சேவைகள் என்பன ஒவ்வொரு ஊரிலும் நிறுவப்பட வேண்டும். ஆண்கள்
பெண்கள் என்ற இருசாராரும் பெற்றோர்களினதும், ஊரில் இயங்கும் இஸ்லாமிய நிலையங்களின்
கண்காணிப்பில் வளர வேண்டிய கட்டாயம் உள்ளது.
இவ்வாறான வளங்கள்
இலகுவாக கிடைக்கும் போது அதன் பயன்பாடு அதிகரிக்கும், அதேநேரம் அவ்வளத்தின் பிரயோகம்
பல திறமைசாலிகளை எங்களிற்கு அறிமுகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய உலகம்
ஒவ்வொருநாளும் பல புதிய துறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது, இதற்கு நாமும் தயாராவது
எங்களது, சிந்தனை, ஒத்துழைப்பு, உழைப்பு எனும் காரணிகளில் தங்கியுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட
விடயங்களானது எமது சமூகம் எதிர்நோக்கும் பல சமகால பிரச்சனைகளை முன்வைத்தே குறிப்பிடப்பட்டுள்ளன.
இங்கு சொல்லப்பட்டவைகள் மிகச் சில விடயங்களே. எமது அன்றாட பிரச்சினைகளையும், அதற்கான
தீர்வுகளையும் எழுதுவதன் நோக்கம் வாசிக்கக்கூடிய என்னிலும், உங்களதும் உள்ளங்கள் மாறவேண்டும்,
அதற்கான உழைப்புகள் எமது ஊர்களில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே.
Mihwar Ahmed Mahroof
Hapugastalawa/ Sri Lanka
Post a Comment