Top News

கோஹ்லி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக இந்திய அமைச்சர் குற்றச்சாட்டு



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றம்சாட்டியுள்ளார். இதனால் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஜூன் 18ம் தேதி நடந்தது.

இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி கோப்பையை வெல்லும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் முறைகேடு நடந்துள்ளதாக மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றம்சாட்டியுள்ளார். பல போட்டிகளில் கேப்டன் விராட் கோஹ்லி சதமடித்து சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

அதேபோல், யுவராஜ் சிங்கும் கடந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளார். இந்தநிலையில் இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் மட்டும் சரியாக விளையாடாமல் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதா? எனவும் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் தலித் பிரிவினருக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். ராம்தாஸ் அத்வாலே குற்றச்சாட்டால் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post