எம்.ஜே.எம்.சஜீத்
மூதூர் தள வைத்தியசாலையை B தரத்திலிருந்து A தரத்திற்கு தரமுயர்த்துவத்திற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும்
எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்பை
கிழக்கு மாகாண அமைச்சரவையினால் B தரத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைகளை A தரத்திற்கு தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் மூதூர் தளவைத்தியசாலையும் சிபார்சு செய்யப்பட்டு மத்திய சுகாதார அமைச்சிற்கு அனுப்பபட்ட போதும் இவ் வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை இதுவரையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது குறித்து மூதூர் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே மூதூர் தள வைத்தியசாலையை B தரத்திலிருந்து A தரத்திற்கு தரமுயர்த்துவத்திற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் 80வது அமர்வு நேற்று (18) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் உதுமாலெப்பை மூதூர் தள வைத்தியசாலையை B தரத்திலிருந்து Aதரத்திற்கு தரமுயர்த்துவத்திற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்தக் கோரி தனிநபர் பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்து உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மூதூர், சேருநுவர, ஈச்சிலம் பத்தை, கிளிவெட்டி, மனச்சேனை, சேனையூர், தோப்பூர், பாலைத் தோப்பூர், சாம்பூர் போன்ற பிரதேசங்களில் வாழும் 110,000 ஆயிரம் மக்கள் மூதூர் தள வைத்தியசாலையினால் நன்மை அடைந்து வருகின்றனர். மூதூர் பிரதேசமானது முஸ்லிம் மக்கள், தமிழ் மக்கள், கனிசமான அளவு சிங்கள மக்களும் சேர்ந்து வாழும் ஒரு பிரதேசமாகும்.
எனவே, இப்பிரதேசத்தில் வாழும் மூவின மக்களின் நன்மை கருதி மூதூர் தளவைத்தியசாலையை B தரத்திலிருந்து A தரத்திற்கு தரம் உயர்த்துவதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை அதிமேதகு ஜனாதிபதி, மற்றும் பிரதம மந்திரி ஆகியோருக்கும், மத்திய சுகாதார அமைச்சிக்கும் அவசர கோரிக்கை விடுக்க வேண்டும். இப்பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பித்து சுமார் மூன்னு மாதங்களாகுகின்றன. இதனை விவாதிப்பதற்கு கிழக்கு மாகாண சபையில் கோரமில்லாத நிலை காணப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகளினால் மாகாண சபையின் செயற்பாடுகள் பலவீனமடைந்த நிலையில் இன்றுதான் அதனை விவாதிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் தரமுயர்த்தப்படவுள்ள வைத்தியசாலைகள் தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் எடுக்கப்;பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படாமலும், முன்னுக்குப்பின் முரணான செயற்பாடுகளும், நடைபெற்றுள்ளன. 2015.11.30ஆம் திகதியன்று நடைபெற்ற கிழக்கு மாகாண அமைச்சரவைக் கூட்டத்தில் மூதூர், குச்சவெளி, அட்டாளைச்சேனை, வைத்தியசாலைகளை A, B தர வைத்தியசாலைகளாக தரமுயர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. இவ்வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கான சாத்தியக்கூற்று அறிக்கைகளைப் பெறும் நோக்குடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் விசேட குழு நியமிக்கப்பட்டு அறிக்கைகளும் பெறப்பட்டன.
மாகாண சுகாதார அமைச்சுக்களின் மாநாடு கடந்த 2014.08.04ஆம் திகதி மத்திய அரசாங்க சுகாதார அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண முதலமைச்சரினால் கிழக்கு மாகாண வைததியசாலைகளை B தரத்திலிருந்து A தரத்திற்கு தரமுயர்த்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்ட வைத்தியசாலைகளின் விபரங்கள் பின்வருமாறு அம்பாரை மாவட்டத்தில் தெஹியத்தகண்டி தள வைத்தியசாலையும், சம்மாந்துறை தள வைத்தியசாலையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை தள வைத்தியசாலையும், திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தள வைத்தியசாலையும் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் சிபாரிசு செய்யப்பட்டது.
2016.09.29ஆம் திகதி கிகழ்கு மாகாணத்தில் B தரத்திலிருந்து A தரத்திற்கு தரமுயர்த்துவதற்காக கிழக்கு மாகாண அமைச்சரவையில் கிண்ணியா தள வைததியசாலையும், இணைத்து எடுக்கப்பட்ட தீர்மானம் சிபாரசு செய்யப்பட்டு மத்திய அரசாங்க சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட்டது. பெயரளவில் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளை தரமுயர்த்தப் போகின்றோம் என தீர்மானங்களை மேற்கொண்டு அதனை முறைப்படி அபிவிருத்தி செய்யாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற நிலமைகள் தொடர்கின்றது.
அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறைப் பிரதேசத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சம்மாந்துறை தள வைத்தியசாலையை யு தரத்திற்கு தரமுயர்த்துவதற்கு பல அமைச்சரவைக் கூட்டங்களில் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட நிலையில் திடீரென சம்மாந்துறை தள வைத்தியசாலையை தரமுயர்த்தும் பட்டியலில் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண அமைச்சரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை மாற்றுகின்ற அதிகாரங்கள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அம்பாரை மாவட்டத்தில் பாரம்பரிய பிரதேசத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை தள வைத்தியசாலையை A தரத்திற்கு தரமுயர்த்துவதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த சபையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு தொடர்பிலான முக்கியமான விடயங்களைப் பற்றி பேசுகின்ற போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சிறுபிள்ளைத்தனமாக அரசியல் பேசுகின்றார். இது தவறான விடயமாகும். எனவே கிழக்கு மாகாணத்தில் முன்மாதிரியான A தரத்திலான வைத்தியசாலையாக மூதூர் வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கெட்டுக்கொள்கின்றேன் எனத்தெரிவித்தார்.
Post a Comment