பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது.
இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரிப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதேபோல் நவாஸ் ஷெரிப்புக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், நவாஸ் ஷெரீப்புக்கு நெருக்கமானவர்கள் அனைவரிடமும் விசாரணை முடிந்தது.
இந்நிலையில், சிறப்பு கூட்டு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்கள் இன்று சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.
பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, 'மொசாக் பொன்சேகா' சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அந்த பட்டியலில் நவாஸ் ஷெரிப்பின் பெயரும் இருந்ததால், அவருக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பனாமா பேப்பர்ஸ் கசிவில் இடம்பெற்றிருந்தவாறு நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தார் ஊழலில் ஈடுபட்டது இந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தால் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment