Top News

இந்த ஆட்சியிலும் சிறுபான்மை மக்களை கவனிக்காவிட்டால் நம்பிக்கை இழந்துவிடும்



(எம்.ஜே.எம்.சஜீத்)

கடந்த ஆட்சிக் காலத்தில் நாங்கள் ஆளும் கட்சியில் அமைச்சர்களாக இருந்த போதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நிகழ்வுகள் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளை இச்சபையில் தெரிவித்தோம். கருமலையூற்று பள்ளிவாசல் உடைக்கப்பட்ட சம்பவத்தினை பார்வையிட இச்சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதியிடம் மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தோம். எங்களின் உணர்வுகளை நீங்கள் அன்று  மதிக்கவில்லை. அவ்வாறான நிகழ்வுகளால்தான் நமது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 

கிழக்கு மாகாண சபையின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் அமைச்சர்கள் கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படவேண்டும். இல்லையெனில் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை நாம் இழக்க வேண்டிவரும் என கிழக்கு மாகாணத்தில் கடந்த யுத்த காலத்தில் அச்சம் காரணமாக விவசாயக் காணிகளை இழந்து வேறு இடங்களில் இடம் பெயரந்து வாழந்ததன் காரணமாக அக்காணிகளுக்கு வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக் முடியாத காணிச் சொந்தக்காரர்களுக்கு வருடாந்த அனுமதிப்பத்திரத்தினை புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.எஸ்.சுபையிரினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரனையில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 80வது அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நேற்று நடைபெற்றது.
தொடர்ந்து உரையாற்றுகையில்....

கிழக்கு மாகாண அமைச்சர்களாக மக்களின் வாக்குகளால் பதவிக்கு வந்தவர்கள் இப்பதவிகள் ஊடாக மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீரப்;பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.


கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினைகளுக்கு இதுவரையும் எவ்விதமான தீர்வுகளும் கிட்டாத நிலைமையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகமான காணிகளுக்கான வருடாந்த உத்தரவுப் பத்திரங்களை புதுப்பிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு கிழக்கு மாகாண சபையில் தனிநபர் சமர்ப்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படும் என பெரும் எதிர்பார்ப்புடன் முஸ்லிம் சமூகம் இந்த அரசுக்கு ஆதரவு வழங்கியது. 

கிழக்கு மாகாண அமைச்சர்கள் கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணங்களுடன் மக்களின் பிரச்சினையை உங்களின் மனங்களில் உள்வாங்குங்கள் அதன் பின்னர் காணிக்கான அதிகாரம் மத்திய அரசுக்கா? அல்லது மாகாண அரசுக்கா? என்ற விபரங்களை பெற்று எப்படியும் கிழக்கு மாகாண மக்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் .

 மத்திய அரசாங்கமும், கிழக்கு மாகாண சபையும் ஆளும் கட்சியாக இருந்து செயல்படுவதனால் மாகாண சபையின் அதிகாரங்களை பெறுவதற்காக மத்திய அரசாங்கத்திடம் விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் எங்களுக்கு அதிகாரம் இல்லை என சொல்லி மக்களின் பிரச்சினைகளை இழுத்தடிப்பதனை நிறுத்த வேண்டும்.

கிழக்கு மாகாண முதலமைச்சரும், அமைச்சரவையும் உருவாகுவதற்கு 14 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து எங்களின் ஆதரவை வழங்கினோம். முன்னாள் கல்வி, காணி அமைச்சர் திரு.விமல வீர திஸாநாயக்கா கிழக்கு மாகாணத்தில் அர்ப்பணிப்போடு செயல்பட்டு 30 வருட காலத்தில் நடைபெற்ற கொடூர யுத்தத்தினால் மூவின மக்கள் மத்தியிலும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த காணிப்பிரச்சினைகளை முடிந்தவரை தீர்த்து தந்தார் என்பது வரலாறாகும்.

கடந்த 02 வருட கால கிழக்கு மாகாண ஆட்சிக் காலத்தில் மாகாண மக்களுக்கு புரிந்த பணிகளைப்பற்றி கிழக்கு மாகாண மக்கள் பேசும் காலம் நெருங்கி வருவதனால் இறுதிக் காலத்தில் மாகாண மக்களுக்கு நல்ல பணிகளை புரிவதற்கு முயற்சி செய்யுங்கள்.

வட மாகாணத்தில் மத்திய அரசாங்கத்தின் நிருவாகத்திற்குட்பட்ட காணிகளை வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும் போது வட மாகாண சபையும் அம்மக்களும் ஒன்றணைந்து எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச காணிகளை வழங்கும் நடவடிக்கைகளை தடை செய்கின்றனர் ஆனால் கிழக்கு மாகாணத்தில் யுத்த காலத்தில் முஸ்லிம்கள் இழந்த காணிகளை விடுவிக்க முடியாத நிலைமை தொடர்கின்றது.

இன்று இச்சபையில் உரையாற்றிய சில உறுப்பினர்கள் இனவாத எண்ணத்துடன் உரையாற்றியிருந்தனர் இது குறித்து நான் கவலை அடைகின்றேன். 

கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 வருட கால யுத்த சூழ்நிலையில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான சில பிரதேசங்களை தமிழ் மக்களும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல பிரதேசங்களை முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான சில பிரதேசங்களை சிங்கள மக்களும் அன்றைய யுத்த சூழ்நிலையினால் சில இடங்களை குறைந்த விலையில் விற்பனை செய்தும், சில பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட சம்பவங்களும் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் நடைமுறைக்குச் சாத்தியமானவைகளை மட்டும் நாம் பேசித் தீர்க்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் வாழும் சனத் தொகைக்கேற்ப இனவிகிதாசார முறையில் அரச காணிகள் பங்கீடு செய்;வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே ஒரு மாவட்டமான அம்பாரையில் 282,000ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இந்த தொகை மாவட்ட சனத் தொகையில் 43.595 விகிதாசாரம் ஆகும். அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்கள் 251,018ஆயிரம் மக்கள் வாழ்கின்றார்கள். இது மாவட்டத்தில் 38.15 விகிதாசாரம் ஆகும். 19 விகிதாசாரமான தமிழ் மக்களும் அம்பாரை மாவட்டத்தில் வாழ்கின்றார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த போதிலும் முஸ்லிம் மக்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட காணி பரப்பளவை விட 13 மடங்கு பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கான இனவிகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் காணிகள் எதிர்காலத்தில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post