தெளஹீத் ஜமாஅத்தின் முன்னாள் செயலாளர் அப்துர் ராசிக் ஆற்றிய உரையில் புத்தர் பெருமானைப் பற்றி தெரிவித்த கருத்துகள் தவறுதலாக சொல்லப்பட்டவைகளாகும். திட்டமிட்டு அவர் புத்தரை அவமதிக்கவில்லை.
அதனால் பொதுபலசேனா அமைப்பினால் தொடரப்பட்டுள்ள மத நிந்தனை வழக்கினை நீதிமன்றம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவை தவறுதலாக சொல்லப்பட்ட கருத்துகள் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நேற்று தெளஹீத் ஜமாஅத் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிவானிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து கொழும்பு, புதுக்கடை நீதிவான் நீதிமன்ற நீதிபதி பொலிஸார் இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரி உடனடியாக கடிதம் ஒன்றினை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
தௌஹீத் ஜமாஅத்தின் முன்னாள் செயலாளர் அப்துர் ராசிக் புத்தபெருமானை அவமதித்துப் பேசினார் என்று குற்றம் சுமத்தி பொதுபல சேனா அமைப்பு இந்த மத நிந்தனை வழக்கினைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று விசாரணைக்கெடுத்துக் கொள்ளப்பட்ட இவ்வழக்கின் பிரதிவாதி அப்துர் ராசிக் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதங்களை முன் வைத்தனர். புத்தர் பற்றிய குறித்த பேச்சு தவறுதலாக இடம்பெற்ற ஒன்றாகும். இது தொடர்பில் நாம் ஏற்கனவே பல தடவைகள் நீதிமன்றத்தில் விளக்கம் தந்துவிட்டோம். தவறுதலாக சொல்லப்பட்டது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு குறித்த வழக்கினை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.
தௌஹீத் ஜமா அத்தின் வாதத்தினையடுத்து நீதிவான் பண்டார தாம் கூறிய குறித்த வார்த்தை தவறுதலாக இடம்பெற்றது என்று அவர்களே தவறை ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் வழக்கை தொடர்ந்து நடாத்துவது தேவையற்றது. புத்தரைப் பற்றி பேசியது தவறுதலாக இடம்பெற்றது என்பதை அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
ஆகவே இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையை கோருவதற்கு பொலிஸ் தரப்பினால் உடனடியாக கடிதம் ஒன்று அனுப்பப்படவேண்டுமென உத்தரவிட்டார்.
விசாரணையை நீதிவான் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். தௌஹீத் ஜமாஅத்தின் சார்பில் ஆர்.ஆர்.ரி.அமைப்பின் சிரேஷ்ட சட்டத்தரணிகளான மைத்திரி குணரத்ன, சிராஸ் நூர்தீன் மற்றும் சட்டத்தரணிகளான நுஸ்ரா சரூக், அன்ஜலோ பெனடிக், வசீம் அக்ரம், ரசீன் சுலைமான் இஸ்மாயில் முஹம்மத் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
Post a Comment