இந்த நாட்டில் சில முஸ்லிம் குழுக்களும், இயக்கங்களும், பௌத்த குழுக்களும் இன வாதத்தினை தூண்டி இனங்களுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்த ஒரு போதும் அரசாங்கம் அனுமதிக்காது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.
காத்தான்குடியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.சாபியின் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் தொடர்ந்துரையாற்றிய அவர் இந்த நாட்டில் பௌத்த மதத்தினை தாங்கிய சில இன ரீதியான குழுக்கள் இனவாத்தினை தூண்டி இன மோதலை உருவாக்க முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றது.
அதற்கு யாரும் துணை போக கூடாது. இந்த நாட்டை இன மத மொழி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட்டு கட்டியெழுப்ப வேண்டும். அதற்காகத்தான் இந்த நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சக்திகள் இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி இந்த நாட்டை குழப்ப நிலைக்கு கொண்டு செல்ல முயற்சித்த போதுதான் இந்த நாட்டில் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
கடந்த முப்பது வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் எல்லைக்கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டமும் அதே போன்று இங்குள்ள எல்லைக்கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.
இன, மத, சமய, மொழி, நிற பேதமின்றி அனைவரும் இலங்கையர்கள் என்ற ஒருமைப்பாட்டுடன் நாம் ஒன்றிணைந்து இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோள்களை நான் கட்சியின் தலைவர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்,
கிழக்கில் பயங்கரவாத பிரச்சினையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்வதற்கு தான் ஆயத்தமாக உள்ளேன் என்றார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபை செயலாளர் எம்.சபி மற்றும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெசீம், காதி நீதிபதி எம்.உமர்லெப்பை உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பலரும் கலந்து கொண்டனர்.
விடிவெள்ளி
Post a Comment