Top News

மோடியின் எச்சரிக்கையை நிகாரித்த பசு பாதுகாவலர்கள்: டிரைவர்கள் மீது தாக்குதல்



பசு பாதுகாவலர்கள் என  தங்களை அழைத்துக் கொள்பவர்கள், தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்விவகாரத்தில் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. பசு பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்து வரும்நிலையில் இதற்கு எதிராக போராட்டமும் தொடங்கியது. இந்த நிலையில் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுத்தார். 

ஆனால் அதேநாள் ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முகமது அலிமுதீன் என்ற இறைச்சி வியாபாரியை கும்பல் ஒன்று அடித்துக் கொன்றது. இறைச்சி வியாபாரி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உள்ளூர் பா.ஜ.க. தலைவர் நித்யானந்த் மகதோ மற்றும் சந்தோஷ் சிங் ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் சோட்டு ராணா என்ற மற்றொரு நபர் ராம்கர் மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் எச்சரிக்கையை நிராகரிக்கும் விதமாக மீண்டும் மாடுகளை ஏற்றிச் சென்ற டிரைவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. பா.ஜனதா ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தின் புறநகர் பகுதியில் கால்நடைகளை மூன்று லாரிகளில் ஏற்றிச் சென்ற டிரைவர்களை பசு பாதுகாவலர்கள் கொடூரமான முறையில் தாக்கி உள்ளனர். தின்சுகியாவில் இருந்து கால்நடைகளை ஏற்றி வந்த அந்த வாகனங்களை சோனாபூர் அருகே இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தடுத்து உள்ளனர். டிரைவர்களை வெளியே இழுத்து கொடூரமாக தாக்கி உள்ளனர். அவர்கள் பசுக்களை கடத்துவதாக கூறி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டிரைவர்கள் கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான ஆவணங்களை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வாகன அனுமதியில் மட்டும் முறைகேடு உள்ளது என போலீஸ் தெரிவித்து உள்ளது.

Post a Comment

Previous Post Next Post