இலங்கையின் சமகால அரசியல் நிலவும் நெருக்கடிகளால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வருத்தத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய அரசியலமைப்பு திருத்தச்சட்டத்திற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை, மஹிந்தவின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“இல்லாத பிரச்சினையை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பு திருத்தச்சட்டம் தயாரிப்பது ஒரு போதும் சரியானதல்ல” என மஹாநாயக்க தேரர்கள் ஒருமனதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தீர்மானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையான வருத்தத்தில் இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் தேரர்கள் மற்றும் மஹாநாயக்க தேரர்கள் 75 பேருக்கும் அதிகமானோர் கண்டியில் கலந்துரையாடல் மேற்கொண்டனர். இதன்போது புதிய அரசியலமைப்புக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்த தீர்மானத்தினால் மஹிந்த ராஜபக்ச வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தினால் ஜனாதிபதி முறையை ரத்து செய்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பலவீனப்படுத்த மஹிந்த தரப்பு காத்திருந்தது.
எனினும் மஹாநாயக்கர்களின் முடிவு அதற்கு தடையாக மாறும் அபாயத்தில் உள்ளமையே மஹிந்தவின் வருத்தத்திற்கு காரணமாகியுள்ளதென அந்த உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் மன்னாரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். மக்களின் கோரிக்கைக்கமைய மாத்திரமே அந்த தீர்மானம் மாற்றமடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment