நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை தொடர்ந்து நீடிக்குமாயின் அது பொருளாதாரத்திற்கு பாதிப்பாக அமையும்.
எனவே குறித்த காலநிலை தொடர்ந்து நீடிக்குமாயின் அதற்கு ஏற்றாற் போல் எமது பொருளாதாரத்தை மாற்றிக் கொள்வது தொடர்பில் திட்டமிட்டுள்ளோம். மேலும் அடுத்து வரும் காலங்களில் வரட்சியான காலநிலை நிலவுமாயின் நாட்டின் பொருளாதாரம் சம்பந்தமாக காத்திரமான தீர்மானங்கள் எடுக்க வேண்டி வரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பிராந்திய நாடுகளில் பரிமாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் ஆராய வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக குடிநீர் பவுசர்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது குருநாகல், கம்பஹா, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு குறித்த பவுசர்கள் வழங்கப்பட்டன. இதன்படி மொத்தமாக 25 குடிநீர் பவுசர்கள் வழங்கப்பட்டன. எனினும் ஏற்கனவே முதற்கட்டமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பவுசர்கள் வழங்கப்பட்டிருந்தன.
இங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கருத்து வெளியிடுகையில்,
தற்போது நாடு முகங்கொடுத்து வரும் கடுமையான வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு குடிநீர் பவுசர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்னும் மேலதிகமாக இன்றைய தினம் பவுசர்கள் வழங்கப்பட்டன. மேலும் பவுசர்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன. இதன்மூலம் அதிகளவிலான சேவைகளை மக்களுக்கு வழங்க முடியும்.
தற்போது நாடு முகங்கொடுத்துள்ள கடுமையான வரட்சி நிரந்தமாக இருக்கும் என்பதனை கூறிக்கொள்ள வேண்டும். நாம் இதற்கு முன்பு வரட்சிகளுக்கு முகங்கொடுத்துள்ளோம். எனினும் அப்படியான வரட்சியா தற்போது ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. இப்போது இலங்கையில் மாத்திரம் வரட்சி ஏற்படவில்லை. இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் குறித்த வரட்சி நிலவுகிறது.
இலங்கையில் மாத்திரமின்றி பிராந்திய நாடுகளிலும் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதனை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை தொடர்பான நிபுணர்கள். உலகம் கடுமையான வரட்சியான காலநிலையை நோக்கி பயணிப்பதாக கூறியுள்ளனர்.
இந்தியாவில் சில பகுதிகளில் எமக்கு ஏற்பட்ட வரட்சியை விடவும் கடுமையான வரட்சி நிலவுகின்றது.ஆகவே இந்த வரட்சியான காலநிலை புதிதாக ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறினே பாரிஸ் பிரகடனத்தில் கைச்சாத்திட்டார். ஆகவே வரட்சியான காலநிலைக்கு ஏற்றால் போல் எமது பொருளாதாரத்தை நாம் மாற்றியமைக்க வேண்டியுள்ளது. இது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
எமது எதிர்கால சந்ததியினர் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே சுற்று சூழலை கருத்திற்கொண்டு நாம் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இதன்படி அடுத்து வரும் காலங்களில் வரட்சி நிலைமையை அவதானித்து பொருளாதாரம் குறித்த காத்திரமான தீர்மானங்கள் எடுக்க வேண்டி வரும் என்றார்.
எம்.எம்.மின்ஹாஜ்