கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மீள முடியாமல் தொடர்ந்தேச்சையாக அகதிகளாக அவல வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ள வட மாகாண முஸ்லிம்களின் நிரந்தர விடியலுக்கு வழி சமைத்து கொடுக்கின்ற வழி வகைகளை ஆராய்கின்ற கள பயணம் ஒன்றையே தேசிய காங்கிரஸ் மேற்கொள்கின்றது என்று இக்கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லா எமக்கு தெரிவித்தார்.
போருக்கு பிந்திய வட மாகாணத்துக்கு குறிப்பாக வன்னி மாவட்டத்துக்கு இவர் முதல் தடவையாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொள்கின்றார். தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலரும் இவருடன் உடன் செல்கின்றனர்.
தேசிய காங்கிரஸின் மகளிர் பொறுப்பாளரும், வட மாகாண அமைப்பாளருமான ஜான்சிராணி சலீம் தலைவரின் அறிவுறுத்தல், வழிகாட்டல் ஆகியவற்றுக்கு அமைய கள பயணத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் இவ்விஜயம் குறித்து நாம் கேட்டபோதே அதாவுல்லா மேற்கண்டவாறு கூறினார்.
இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
கட்சி அரசியல், குறுகிய அரசியல் இலாபம் ஆகியவற்றுக்கு அப்பால் மனிதம் என்கிற உயரிய பூட்கையை மனதில் வைத்து கொண்டு, வட மாகாண முஸ்லிம் உறவுகளின் துயரம் நிறைந்த வாழ்க்கைக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற பரந்த இலட்சியத்துடனேயே நாம் வடக்குக்கு கள பயணம் மேற்கொள்கின்றோம்.
வடக்கு முஸ்லிம்களின் உயிர் வாழும் உரிமைக்காக குரல் கொடுக்க கிழக்கு மாகாண முஸ்லிம் உறவுகள் முன்வந்து உள்ளனர் என்கிற உண்மையான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற நல்லெண்ண பயணமாகவும் இது அமைய பெறும்.
நல்லாட்சியை உருவாக்குவதில் மிக காத்திரமான பங்களிப்புகளை வழங்கிய வடக்கு முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏதேனும் நடைபெற தொடங்கி உள்ளனவா? அல்லது ஏமாற்றங்கள்தான் தொடர்கின்றனவா? என்பதை நேரிலேயே கண்டு கொள்கின்ற உண்மை காண் பயணமாகவும் இது இருக்கும்.
மேலும் வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாற்றான் தாய் மனப் பான்மையுடன் நடக்காமல் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வாழ்வு, வாழ்வாதார எழுச்சி ஆகியவற்றுக்கு வேண்டிய உரிய நடவடிக்கைகளை வட மாகாண சபை ஊடாக இனி மேலாவது உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்ற புரட்சி பயணமாகவும் இது பேசப்படும்.
மொத்தத்தில் இப்பயணம் வடக்கு முஸ்லிம்களை நிம்மதி அற்ற வாழ்க்கையில் இருந்தும், நீடித்த துன்ப சுமைகளில் இருந்தும் விடுதலை பெற வைக்கின்ற நிரந்தர விடியலுக்கான மாற்றத்தின் திறவுகோல் ஆகும் என்று நாம் விசுவாசிக்கின்றோம்.
இவர்களில் ஒருவராகவும், எமது பிரதிநிதியாகவும் இருந்து ஜான்சிராணி சலீம் எமது இலட்சிய பயணத்தின் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் பாடுபடுவார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் அல்லாது நாட்டின் ஏனைய மாகாணங்களில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களினது பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை பெற்று கொடுக்கின்ற செயல் திட்டங்களிலும் எதிர்காலத்தில் தேசிய காங்கிரஸ் முழுவீச்சுடன் ஈடுபடும்.
Post a Comment