Top News

கிழக்கில் மயில் ஆட முடியும் என்றால் வடக்கில் குதிரை ஏன் ஓட முடியாது?




ரி. தர்மேந்திரன் 

கிழக்கில் மயில் ஆட முடியும் என்றால் வடக்கில் ஏன் குதிரை ஓட முடியாது? என்று எமக்கு வழங்கிய பேட்டியில் வினவினார் தேசிய காங்கிரஸ் கட்சியின் மகளிர் பொறுப்பாளரும், வட மாகாண அமைப்பாளருமான ஜான்சிராணி சலீம். வட மாகாண முஸ்லிம்களின் அரசியலில் முதலாவது சாதனை பெண்ணாக வலம் வர கூடிய வாய்ப்பு முன்னாள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா மூலமாக இவருக்கு கிடைத்து உள்ளது. இவருடனான நேர்காணல் வருமாறு:-

கேள்வி:- உங்கள் பெயரில் ஏதோ ஒரு இரகசியம் புதைந்து இருப்பது போல தெரிகின்றதே?

பதில்:- பாரத தேசத்தின் சுதந்திரத்துக்காக போராடிய வீர பெண்மணி ஜான்சிராணியின் வரலாற்றை படித்து, அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்த எனது தாய் மாமன் எமது குடும்ப உறவு வட்டத்தில் பிறந்த முதலாவது பெண் பிள்ளையான எனக்கு ஜான்சிராணி என்கிற பெயரை சூட்டினார் என்பதை அறிந்தபோது நான் பெருமையும், பெருமிதமும் அடைந்தேன்.

நான் வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவை சேர்ந்தவள். வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள மன்னாரில் ஜான்சிராணி கோட்டை அமைய பெற்று உள்நாட்டு மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு இடையில் அதீத பிரசித்தி அடைந்து விளங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான் கடந்த 07 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன். ஆனால் இப்போதுதான் இந்த ஜான்சிராணிக்கு சரியான வாகனம் கிடைத்து உள்ளது.

கேள்வி:- வட மாகாண முஸ்லிம்கள் மத்தியில் வேறு முஸ்லிம் கட்சிகள் பிரபலமானவையாக இருக்கின்றபோது, அதுவும் அவை அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருகின்ற நிலையில் நீங்கள் மாகாணம் தாண்டி குதிரை பாய்ச்சல் மேற்கொண்டு இருக்கின்றீர்களே?

பதில்:- ஜான்சிராணியின் பெயரில் மாத்திரம் அல்ல செயலிலும் புரட்சி இருக்கத்தானே செய்யும்? நீங்கள் சொல்லுகின்ற முஸ்லிம் கட்சிகளுக்கு சமூக பொறுப்பு கிடையாது. ஓசியும், வாசியும் கிடைக்கின்றபோது முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை காட்டி கொடுக்கின்ற அல்லது தாரை வார்க்கின்ற அரசியலைத்தான் நீண்ட நெடுங்காலமாக செய்து வருகின்றன. 

குறிப்பாக இப்போதைய ஆட்சியில் எத்தனையோ அநியாயங்கள் முஸ்லிம்களுக்கு தொடர்ந்தேச்சையாக இழைக்கப்பட்டு வருகின்றபோதிலும் அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்டு பேசாமடந்தைகள் போல இருந்து வருகின்றன. இடையிடையே பெட்டை கோழிகள் போல அறிக்கைகள் விடுகின்றன. 

ஆகவேதான் பணம், பதவி, அதிகாரம் ஆகியவற்றுக்கு பின்னால் போகாத, மக்களை நேசிக்கின்ற உன்னதமான தலைவருடன், உண்மையான அமீருடன் ஒன்றித்து பயணிப்பதிலும், பணியாற்றுவதிலும் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகின்றேன்.

கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக பேரியல் அஷ்ரப் வரவே கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து செயற்பட்ட அதாவுல்லாவை நம்பி எவ்வாறு அவருடைய கட்சியில் இணைந்து உள்ளீர்கள்?

பதில்:-. இலங்கையின் அரசியல் உலகம் மென்மையும், வன்மையும் நிறைந்தது. எனவே ஒரு அரசியல் கட்சியின் தலைவர் நல்லவராக மாத்திரம் இருந்தால் போதாது, வல்லவராகவும் இருக்க வேண்டும். இந்த இடத்தில்தான் பெண் தலைமைத்துவம் என்கிற விடயம் சர்ச்சைக்கு உரிய விவகாரமாக உள்ளது. 

எல்லோராலும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவாகவோ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவாகவோ மிளிர்தல் இயலாது. அதுவும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரை இது ஒரு மிக பாரிய சவால் ஆகும். தலைவரை திடீரென இழந்த நிலையில் தத்தளித்து கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸுக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும் இச்சவாலை வலிந்து எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருந்து இருக்கவில்லை.

இதனால்தான் அதாவுல்லா அடங்கலான அப்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பேரியல் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக வருவதை விரும்பவும் இல்லை, ஊக்குவிக்கவும் இல்லை. இதே நேரம் மனைவி அரசியலுக்கு வருவதை தலைவர் அஷ்ரப் விரும்பி இருக்கவில்லை என்று முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் அறிந்து வைத்திருந்தனர்.

எமது அமீர் அதாவுல்லாவின் தீர்க்கதரிசனமும், தூர நோக்கும் சரியாக இருந்தது என்பதையே பேரியல் அஷ்ரப்பின் பொறுப்பில் விடப்பட்ட நுஆ கட்சியின் இன்றைய நிலையும், இவர் அரசியலில் இருந்து ஒதுங்கி காணப்படுகின்ற நிலைமையும் காட்டி நிற்கின்றன. சகோதர சிறுபான்மை இனத்தை எடுத்து கொண்டால் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகரன் இறந்த பிற்பாடு இவரின் மனைவி சாந்தினி சந்திரசேகரன் இக்கட்சியின் தலைவராக வந்தார் என்பதும் இவரின் தலைமைத்துவம் சோபித்து இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கவை.
தற்போது ஒவ்வொரு கட்சியிலும் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது சட்டம் ஆகும். இதற்கு அமையவே தேசிய காங்கிரஸ் என் போன்ற பெண்களை அடையாளம் கண்டு உள்ளீர்த்து உள்ளது.

நான் 2010 ஆண்டுதான் அரசியலுக்கு பிரவேசித்த நிலையில் நான் மற்றவர்களிடம் இருந்து அறிந்து கொண்டவற்றில் இருந்தும், எனது அனுமானத்தில் இருந்தும் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் அன்று எதிர் கொண்டிருந்த தலைமைத்துவ பிரச்சினை சம்பந்தப்பட்ட இக்கேள்விக்கு பதில் தந்து உள்ளேன்.

கேள்வி:- உங்களுடைய ஆரம்ப கால அரசியல் குறித்து கூறுங்கள்?
பதில்:- நான் ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீவிர ஆதரவாளராக இருந்தேன். நூர்தின் மசூர் ஹாஜியாரின் தேர்தல் வெற்றிக்கு அளப்பரிய பங்களிப்புகள் வழங்கினேன். தற்போதைய வன்னி அமைச்சரின் கோட்டையாக இருந்த ஊரில் ஹாஜியாரின் பிரமாண்ட கட் அவுட்டை நான் வைத்தது அப்போது ஒரு பெரிய கதையாக வன்னி முழுவதும் அடிபட்டது. தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஹாஜியார் எனது இல்லத்துக்கு நேரில் வந்து நன்றியறிதலை வெளிப்படுத்தி சென்றார்.

ஆயினும் அவரின் மறைவுக்கு பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்கள் என்னை தேர்தல் காலங்களில் மட்டும் தேடி வந்தார்கள். அதே நேரம் நான் பிரபலம் அடைந்து விட கூடாது என்பதில் முஸ்லிம் காங்கிரஸின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும், அவருடைய கையாட்களும் குறியாக இருந்தனர். இவர்களுக்கெல்லாம் தக்க பாடம் கற்பிக்க சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். அப்போதுதான் கனவானும், குணவானும், பலவானும், புத்திமானுமாகிய அதாவுல்லா குறித்து அறிந்து, புரிந்து அவருடன் இணைந்து கொண்டேன்.

கேள்வி:- கடந்த பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் போட்டியிட்டது. இதனால்தான் மு. காவுக்கு எதிரான வாக்குகள் இரண்டாக பிரிந்து அதாவுல்லா பாராளுமன்றம்செல்ல முடியாமல் நேர்ந்தது என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அதாவுல்லா இப்போதுவன்னியை தளமாக கொண்டு வடக்குக்கு அரசியல் செயற்பாட்டை விஸ்தரித்து இருப்பது றிசாத்தை பழி வாங்குவதற்காகவே என்று கூறலாமா?

பதில்:- எங்கள் அமீர் அதாவுல்லாவுக்கு எவரையும் பழி வாங்க வேண்டிய தேவை கிடையாது. அவர் எப்போதும் ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர். அவர் பாராளுமன்ற உறுப்பினராக வர முடியவில்லையே தவிர இந்நாட்டு ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள் ஆகியோரை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து பேச கூடிய வலுவும், வலிமையும் உடையவராகத்தான் இப்போதும் உள்ளார்.

தேசிய காங்கிரஸ் நாட்டில் உள்ள அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளில் ஒன்று என்கிற வகையில் உள்நாட்டில் எங்கு, எப்போது வேண்டுமானாலும் அரசியல் செய்ய முடியும். இதற்கு எவரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. எமது அமீரின் பரந்த மன பான்மையின் வெளிப்பாடுதான் வடக்கு நோக்கிய தேசிய காங்கிரஸின் பயணம் என்று கூறினால் அது மிகை ஆகாது. கிழக்கின் சூரியன் உதிக்கின்றது என்பதற்காக அது வடக்குக்கு தேவை இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா? கிழக்கில் மயில் ஆட முடியும் என்றால் வடக்கில் ஏன் குதிரை ஓட முடியாது?

கேள்வி:- நீங்கள் தற்போது கொழும்பில் வசிக்கின்றீர்கள். இச்சூழலில் எவ்வாறு உங்களால் வடக்கில் ஒரு உருப்படியான அரசியலை செய்ய முடியும்?

பதில்:- இது ஒரு நியாயமான கேள்வி. நான் என்னை முழு நேர அரசியலில் ஈடுபடுத்த முடிவெடுத்து கொண்டுதான் தேசிய காங்கிரஸில் இணைந்து உள்ளேன். இதற்காக தனியார் துறையில் நான் வகிக்கின்ற உயர் தொழிலையும் துறக்க தயாராக உள்ளேன்.

எனது முயற்சிகளுக்கும், முன்னெடுப்புகளுக்கும் குடும்பத்தினர் உற்ற துணையாக இருந்து வருகின்றனர். வடக்கில் கிராமங்கள் தோறும் அவையங்கள் அமைக்கவும், அவற்றின் மூலமாக கட்சி பணிகளையும், மக்கள் பணிகளையும் மேற்கொள்ளவும் பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன். இவற்றுக்கான வசதிகள், வாய்ப்புகள் அனைத்தையும் கட்சி தலைமை செய்து தந்து உள்ளது. 

ஏற்கனவே நான் எனது பொது பணிகள் மூலமாக வன்னி மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானவள் என்பதால் இவை எனக்கு கடினமான காரியங்களாக இருக்க போவதில்லை. போரூட் நிறுவனத்தின் புத்தளம் மாவட்டத்துக்கான பாலர் பாடசாலை இணைப்பாளராக செயற்பட்டு இருக்கின்றேன். 

வன்னி சமூக அபிவிருத்தி அமைப்பு என்கிற அரச சார்பற்ற நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வறுமை கோட்டுக்குள் வாழ்கின்ற மக்களுக்கு கணிசமான அளவு சேவைகள் செய்து வந்த நிலையில் சில அரசியல்வாதிகள் என் மீது அழுத்தங்களை பிரயோகித்து இருந்தனர் என்பதையும் இவ்விடத்தில் சொல்ல விரும்புகின்றேன். எனது மாதாந்த சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாந்தம் ஏழை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றேன்.

தற்போதைய சூழலில் வடக்கில் அரசியல் செய்வது என்பது உண்மையில் பாரிய சவால் ஆகும் என்பதையும் நான் அறிவேன். இது ஆயுதபாணியுடன் நிராயுதபாணி ஒருவர் சண்டை போடுவதை ஒத்தது. பல கட்டுக்கதைகளுக்கும், இட்டுக்கதைகளுக்கும் ஆளாக நேரும். நான் ஒரு பெண்ணாக இருந்தாலும் இவற்றை எல்லாம் எதிர்கொள்ள திடசற்பம் பூண்டு உள்ளேன். சாதிக்க பிறந்தவள் பெண் என்பதை நிரூபித்து காட்டுவேன்.

கேள்வி:- தற்போதைய நல்லாட்சியில் முஸ்லிம்களின் நிலை குறித்து என்ன சொல்கின்றீர்கள்?

பதில்:- இந்த நல்லாட்சி ஒரு நீர் குமிழி போல உள்ளது. நீர் குமிழி பல வர்ண ஜாலங்களையும் காட்டும், ஆனால் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும். இந்நல்லாட்சியில் யாரிடம் அதிகாரம் உள்ளது என்பது தெரியவில்லை. தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன்தான்.

முஸ்லிம்கள் இவ்வாட்சியில் அநாதைகள் ஆக்கப்பட்டு உள்ளனர். இதை அரசாங்கமும் சரி, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் தலைவர்களும் சரி கண்டு கொண்டதாக தெரியவில்லை.

விடுதலை புலிகள் வடக்கு மண்ணில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது துரதிஷ்டமான துயரியல் சம்பவம் ஆகும். ஆனால் விடுதலை புலிகளின் அழிவுக்கு பிற்பாடுதான் சிங்கள பேரினவாதமும், பௌத்த பெருமதவாதமும் அகில இலங்கை ரீதியில் முஸ்லிம்களை அச்சுறுத்தி அடக்குமுறைகளுக்கு உட்படுத்தி வருகின்றன என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. 48 மணி நேரத்துக்குள் வடக்கில் இருந்து புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது போல கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் பேரினவாதிகளாலும், பெருமதவாதிகளாலும் கிழக்கு மாகாணத்துக்கு துரத்தப்பட கூடிய ஆபத்து கண் முன் தெரிகின்றது.

கேள்வி:- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய பட்டியலை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்குவார் என்று றிசாத் பதியுதீன் கடந்த பொது தேர்தலில் வாக்குறுதி வழங்கி இருந்தார். ஆனால் புத்தளம் நவவிக்குத்தான் அப்பதவியை வழங்கினார். இது குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்:- அரசியல் அமைப்பு மாற்றப்பட்டு தொகுதிவாரி தேர்தல் முறை மீண்டும் கொண்டு வரப்படுகின்ற பட்சத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனின் எழுச்சியிலும், வளர்ச்சியிலும் தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது அரசியல் நடப்புகளை நெருக்கமாக அவதானிப்பவர்களுக்கு விளங்கி இருக்கும்.

முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற புத்தளத்தில் இருந்து தொகுதிவாரி தேர்தல் முறையில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்று எம். பியாவது திண்ணம் ஆகும். ஆகவேதான் அவருடைய எதிர்கால அரசியல் வெற்றிக்கான மூலதனமாக எம். எச். எம். நவவிக்கு தேசிய பட்டியல் எம். பி பதவியை வழங்கி உள்ளார். புத்தளம் மீது அவரின் பார்வை அதிகம் படுகின்றது. அத்துடன் பட்டாணி ராசிக் படுகொலையால் கொதிப்படைந்த புத்தளம் மக்களை சாந்தப்படுத்துகின்ற நோக்கமும் அவருக்கு இருந்து உள்ளது.

Post a Comment

Previous Post Next Post