அரசுப்படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஐ.எஸ் தலைவர் அல் - பக்தாதி உயிரோடு தான் இருக்கிறார் என்று குர்திஷ் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர், உலகமெங்கும் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஐ.எஸ் இயக்கத்தை ஒழிப்பதற்கான பணியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர்.
ஈராக்கில் ஐ.எஸ் வசமிருந்த பெரும்பாலான நகரங்களை அரசுப்படையினர் மீட்டுவிட்டனர். அரசுப்படையினரின் வான் தாக்குதலில் ஐ.எஸ் இயக்க தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக சிரிய போர் கண்காணிப்பகம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. கடந்த மாதம் ரஷ்ய ராணுவமும் இதே போல் பக்தாதி மரணமடைந்துவிட்டதாக அறிவித்திருந்தது. ஆனால், அமெரிக்க பாதுகாப்பு துறை அல் பக்தாதி மரணம் தொடர்பான உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என கூறியிருந்தது.
இந்நிலையில், அபுபக்கர் அல் பக்தாதி 99% உயிரோடு இருப்பதாகவும் தங்களுக்கு அவர் குறித்த தகவல் கிடைத்துள்ளதாகவும், ஐ.எஸ் அமைப்பை எதிர்த்து போரிடும் குர்திஷ் படை தெரிவித்துள்ளது. ரக்கா நகரில் தான் அல் பக்தாதி பதுங்கியிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் குர்திஷ் படை அறிவித்துள்ளது.
Post a Comment