நரேந்திரமோடி இன்று முதல் 3 நாள் பயணமாக இஸ்ரேல் செல்கிறார். அந்நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல்முறை.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) இஸ்ரேல் நாட்டுக்கு செல்கிறார். இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி அதன் நினைவாக இந்த பயணம் அமைகிறது. அதோடு இஸ்ரேல் நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல் முறை.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய உறவுகளை உறுதிப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையின்போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விவசாயம் மற்றும் தண்ணீர், கண்டுபிடிப்புகள், வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது. இதுதவிர இரு நாட்டு மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்துவது, விமான போக்குவரத்து, முதலீடு ஆகியவைகளை வலுப் படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
முன்னதாக இஸ்ரேல் வரும் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் நேதன்யாஹு விமான நிலையத்துக்கு வந்து வரவேற்கிறார். அவர் அமெரிக்க ஜனாதிபதி, போப் ஆண்டவர் தவிர வேறு யாரையும் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்பது இல்லை என்பதால் இது ஒரு சிறப்பு நிகழ்வாக கருதப்படுகிறது. அதோடு இன்று மோடிக்கு அவர் விருந்தும் அளிக்கிறார்.
நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடிக்கு டெல் அவிவ் நகரில் உள்ள இந்தியர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி உள்பட மோடி பங்கேற்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளிலும் இஸ்ரேல் பிரதமரும் கலந்து கொள்கிறார். ஹைபா நகரில் உள்ள இந்திய கல்லறையில் இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடங்களில் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
நவம்பர் 26-ல் மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர் தப்பிய ஹோல்ட்ஸ்பெர்க் மோஷ் என்பவரையும் சந்திக்கிறார். அவரது இந்திய பராமரிப்பாளர் சாண்ட்ரா என்பவரால் அவர் காப்பாற்றப்பட்டார். ஆனால் மோஷின் பெற்றோர் உள்பட 8 இஸ்ரேல் நாட்டவர்கள் 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு, ‘இந்திய பிரதமரின் வருகை இஸ்ரேலுக்கு வரலாற்று சிறப்புமிக்கது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்துவது மிகவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கை’ என்று கூறியுள்ளார்.
இந்த இரு தலைவர்களும் ஐ.நா. தொடர்பான நிகழ்ச்சிகளில் வெளிநாடுகளில் 2 முறை சந்தித்துள்ளனர். அதன்பின்னர் இருவரும் தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்தார்கள் என கூறப்படுகிறது.
நாளை இஸ்ரேல் ஜனாதிபதி ரேவன் ரிவ்லின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஐசக் ஹெர்சோக் ஆகியோரையும் மோடி சந்தித்து பேசுகிறார்.
Post a Comment