வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்ற பௌத்த புனிதத் தலங்கள், சின்னங்கள் அழிக்கப்படுகின்றமை தொடர்பாக ஆராய்வதற்காக சிங்கள பௌத்த பிரதான பீடங்களின் மகாநயகர்கள் தலைமையிலான குழுவொன்று விஜயம் செய்யவுள்ளது.
மல்வத்த, அஸ்கிரிய, ராமாஞ்ய நிக்காய, அமரபுர நிக்காய ஆகிய நான்கு பீடங்களினதும் தலைமைத்துவத்தை வகிக்கும் மகாநாயகர்களே வெகு விரைவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
தமிழ் மக்கள் பரந்துவாழ்கின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புராதன பௌத்த சின்னங்களும், தலங்களும் அழிக்கப்பட்டு வருவதாக தென்னிலங்கையில் செயற்படுகின்ற பொதுபல சேனா, ராவணா பலய, சிங்ஹலே போன்ற பேரினவாதக் குழுக்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றன.
அம்பாறை மாயக்கல்லி, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அண்மைக் காலங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் அங்கு விரைந்து மாவட்ட செயலாளரை சந்தித்து இதுகுறித்து பகிரங்கமாக எச்சரிக்கையையும் விடுத்திருந்ததுடன், குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்று பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தனர்.
அதுமட்டுமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலும் பல பௌத்த சின்னங்களும், புராதன தலங்களும் அழிக்கப்படுவதாக குறித்த அமைப்புக்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றன.
இந்த நிலையில் இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக பிரதான மூன்று பீடங்களின் மகாநாயகர்கள் இணைந்து அப்பகுதிக்குச் சென்று கள ஆய்வுகளை நடத்தவுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பிரதம செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் வாரங்களில் நடைபெறுகின்ற சங்க சபையில் கலந்தாலோசிக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment