கிழக்கு மாகாணத்தில் கழிவறைகள் குறைபாடுள்ள பாடசாலைகளுக்கு கழிப்பறைகளை நிர்மாணிக்க தேசிய கல்வியமைச்சினால் 23 கோடியே 80 இலட்ச ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது.
இதனூடாக கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் கழிப்பறை குறைபாடுள்ள பாடசாலைகள் அடையாளங்காணப்பட்டு அவற்றின் குறைபாடுகளை தீர்க்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.
தமது பாடசாலைகளில் கழிப்பறைகள் இன்மையால் பல மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதையே நிறுத்தி இடை விலகுகின்ற நிலைமையும் தமக்கு அறியக் கிடைத்ததுடன் இவ்வாறான நிதியொதுக்கீடுகள் மூலம் அந்தக் குறைபாடுகள் தீர்க்கக் கிடைத்தமை தமக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.
கிழக்கின் பாடசாலைகளில் தளபாட பற்றாக்குறையை முற்றாக நிவர்த்தி செய்யவும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே கிழக்கு முதலமைச்சரின் இலக்காக அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை கடந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் போது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளின் பற்றுச் சீட்டுக்களுக்கான நிதி வழங்கப்பட்ட போதிலும் இந்த வருட அபிவிருத்திகளுக்கான நிதி இதுவரை கிடைக்கப் பெறவில்லை என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
அத்துடன் இந்த ஆண்டுக்குரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான நிதியை விரைவில் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
Post a Comment