இலங்கை முஸ்லிம்கள் மீது கோட்டே மகா சங்க சபையினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து உண்மை நிலையினைக் கண்டறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுயாதீன ஆணைக்குழுவொன்றினை நியமிக்க வேண்டும்.
இதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம். எம்.யாசீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாம ஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் இத்தேபான தாம்மாலங்கார அவர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட மகஜர் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே வக்பு சபையின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்;
“கோட்டே மகா சங்க சபையினர் இலங்கையில் வாழும் சகல இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் உருவாகியுள்ள பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகளுக்கான காரணங்களை அறிந்து அவற்றைத் தீர்த்து வைப்பதற்காக புத்திஜீவிகள் அடங்கிய சுயாதீன ஆணைக்குழுவொன்றினை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது வரவேற்கத்தக்கதாகும்.
இதேவேளை அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை ஏற்றுக் கொள்ளத்தக்கவையல்ல. சிங்கள தேசியவாதக் கொள்கையை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவே இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
எம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று முஸ்லிம்களான நாம் வாதிட்டுக் கொண்டிருப்பதைவிட அது சட்ட ரீதியான ஒரு நிறுவனம் மூலம் கூறப்பட வேண்டும். இதனாலேயே இக் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டுமென வக்பு சபை வலியுறுத்துகிறது.
பெரும்பான்மையின பேரினவாதிகள் நாம் கண்ட இடங்களிலெல்லாம் பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்களை நிர்மாணிக்கிறோம் என்று குற்றச் சுமத்துகிறார்கள். இவ்வாறான குற்றச்சாட்டுகளால் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களைத் தவறாக எண்ணுகிறார்கள். முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று கருதுகிறார்கள்.
முஸ்லிம்கள் இந்நாட்டை ஆக்கிரமிக்க வந்தவர்கள் என்ற கருத்து மக்கள் மயப்படுத்தப்பட்டு விட்டது. இதனைப் பொய்யென நிரூபிக்க ஆணைக்குழுவொன்று நியமிப்பது அவசியமாகும் என்றார்.
கோட்டே மகாசங்க சபையின் தேரர்கள் முஸ்லிம்கள் பௌத்த மதத்தலங்களையும் புத்தர் சிலைகளையும் அழிக்கிறார்கள். தங்கள் சனத்தொகையை வேகமாக அதிகரித்துக் கொள்கிறார்கள்.
போதைப் பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். பௌத்தர்களை மதம் மாற்றுகிறார்கள். தொல்பொருள் பிரதேசங்களில் அத்துமீறி பிரவேசித்து தொல் பொருட்களை அழிக்கிறார்கள்.
வில்பத்து வன பிரதேசத்தை அழிக்கிறார்கள். முஸ்லிம் அடிப்படைவாதம் காலூன்றி வருகிறது. எனும் முறைப்பாடுகளை மகஜர் மூலம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ஏ.பரீல்
Post a Comment