தற்போது நடைமுறையிலுள்ள யாப்பில் குறைபாடுகள் உள்ளமையினாலேயே மக்கள் புதியதொரு யாப்பைக் கோரி நிற்பதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,
அத்துடன் யாப்பில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு பாதகமான விடயங்கள் உள்ளமையினாலேயே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன என்ற யதார்த்தத்தை நாம் புரிந்த கொள்ள வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பான தவறான தோற்றப்பாடு நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதால் நாட்டின் அனைத்து மக்களும் அதில் நன்மையடைவார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாட்டில் உருவாகியுள்ள கருத்தாடல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கிழக்கு முதலமைச்சர் ,
அதிகாரப் பகிர்வின் ஊடாக இந்த நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்தவும் நிர்வாகக் கட்டமைப்பினை பலப்படுத்தவும் இலகுவாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
இன்று அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்படாமையினால் பல மாகாணங்களில் உள்ள வளங்கள் பயன்படுத்தப்படாமலே அழிந்து போகக்கூடிய நிலைமை உள்ளது என்பதுடன் குறித்த பகுதிகளில் உள்ள வளங்கள் தொடர்பில் அந்த மாகாணத்திலுள்ளவர்களுக்கே அதிகம் தெரியும் என்பதால் அவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில் அவற்றினூடாக அதிக பலனை இந்த நாட்டு மக்கள் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
அதிகாரம் பகிரப்படுவது என்பது நாட்டைப் பிரிப்பது என பொருள் கொள்ளலாகாது என்பதுடன் அதிகாரப் பகிர்வின் ஊடாக அனைத்து பகுதிகளிலுமுள்ள மக்களின் அபிலாஷைகளை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய சூழலை நம் நாட்டில் உருவாக்க முடியும்.
அத்துடன் அதிகாரப் பகிர்வின் ஊடாக நாடு பிளவுபடும் என்ற கருத்து முட்டாள்த்தனமானது என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். அதிகாரம் வெறுமனே வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் வழங்கப்படப் போவதில்லை தெற்கு,மேற்கு மத்திய உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்படும். அத்துடன் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் இந்த நாட்டிற்கு எதிரிகளல்ல அவர்களும் இந்த நாட்டை நேசிப்பவர்கள் தான்.
இன்று முடக்கப்பட்டுள்ள அதிகாரங்களால் நிர்வாக ரீதியாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் அவர்கள் பல்வேறு சவால்களை எதிர் கொள்கினறார்கள்,இதே சவால்களை ஹம்பாந்தோட்டையில் வாழ்பவர்களும் கதிர்காமத்தில் உள்ளவர்களும் அக்குரனையில் உள்ளவர்கள் என அனைவரும் எதிர்கொள்கினறார்கள்.
அதிகாரம் கொழும்பில் முடங்கியுள்ளதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதுடன் கொழும்பிலுள்ள அதிகாரத்தை ஏன் மட்டக்களப்புக்கு,ஹம்பாந்தோட்டைக்கு யாழ்ப்பாணத்துக்கு காலிக்கு பொலன்னறுவைக்கு குருணாகலைக்கு வழங்குவதில் ஏன் இந்த தயக்கம் என்று தான் நாம் கேட்கின்றோம்.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டின் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய அனைவருக்கும் சுதந்திரமாக தமது உரிமைகளை அனுபவிக்க கூடிய அரசியலமைப்பை உருவாக்க முன்வர வேண்டும் என குறிப்பிட்டார்
Post a Comment