அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னின்று உழைத்த 62இலட்சம் மக்கள் இயக்கம் எதிர்வரும் 15ஆம் திகதி சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளது. இந்த போராட்டம் விகாரமாதேவி அரங்குக்கு முன்னால் மாலை 3மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதுடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு இனவாத சாயம் பூசுபவர்களுக்கு பதில் அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என இவ்வமைப்பின் அங்கத்துவ கட்சியான நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவர வாக்களித்த 62 இலட்சம் பேர் சார்பாக 50 க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இணைந்து 62லட்சம் மக்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்துக்கு வரும்போது அரசாங்கம் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் என தெரிவித்திருந்தது. அது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற போதும் அதன் நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பது எமது கடமை.
அத்துடன் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு தயாரிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கும்போது அதனை இனவாதிகள் தங்களது இனவாத கருத்துக்களை பரப்பி தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கும் பதிலளிக்க வேண்டியிருக்கின்றது. அத்துடன் அரசாங்கத்தை ஏற்படுத்தியவர்கள் இன்னும் உறுதியாகவே இருக்கின்றனர் என்பதையும் அரசாங்கத்தை வீழ்த்த திட்டமிட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு சொல்லவேண்டி இருக்கின்றது.
அதனால்தான் இந்த நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் 15 ஆம் திகதி விகாரமாதேவி அரங்குக்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதனால் அன்றைய தினம் அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்கள் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் அரசாங்கத்தை வீழ்த்த திட்டமிட்டிருக்கும் இனவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கும் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவளிக்கவேண்டும் என்றார்.