புத்த பெருமானின் பிறப்பிடமான லும்பினியை பாதுகாப்பதற்கு ஜப்பானுக்கு அடுத்து படியாக முதற்தடவையாக நேபாளத்திற்கு இலங்கை 15 கோடி ரூபா நிதி உதவி செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கினாலும் எம்மிடம் இனவாதம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் உள்ள 150 விகாரைகளை புனர்நிர்மாணம் செய்வதற்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் உள்ள தொல்பொருளியல் சார்ந்த இடங்களையும் விகாரைகளையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பும் கடமையுமாகும்.இதன் அடிப்படையிலேயே 150 விகாரைகளை புனர் நிர்மாணம் செய்வதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளோம். இந்த நடவடிக்கைகள் தொடரும். அரசர்களை போன்று பெளத்த விகாரைகளை புனர்நிர்மாணம் செய்யவுள்ளோம். நான் பிரதமராகும் வரைக்கும் விகாரைகளின் புனர்நிர்மாண விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் உலகில் தற்போது பெளத்த தர்மத்தை பாதுகாக்கும் முக்கிய நாடு இலங்கையாகும். பெளத்த தர்மத்தை பாதுகாத்து கொடுத்ததும் இலங்கையாகும். இல்லையேல் மியன்மார் உள்ளிட்ட நாடுகளின் நிலைமை என்னவாகும். ஆகவே பெளத்த தர்மத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் பல இடங்களுக்கு பயணம் செய்த போது விகாரைகளின் உண்மையான நிலைமையை அறிந்து கொண்டேன். புனரமைப்பதற்கு உரிய நிதி இல்லாமல் பல விகாரைகளின் நிர்வாகங்கள் கஷ்டப்படுகின்றன. இதனை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கையை எடுத்தோம்.
எவ்வாறாயினும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையை நாம் தொடர்ந்து பாதுகாப்போம். அதேபோன்று நாட்டில் உள்ள ஏனைய மதங்களில் உரிமைகளை பாதுகாப்போம். இந்த நிகழ்வில் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதனும் இங்கு வந்தமையையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். பெளத்த மத முன்னுரிமையை பாதுகாப்போம். அதற்கு மாறாக இனவாதம் எம்மிடம் இல்லை.
பெளத்த மத முன்னுரிமையை பாதுகாக்கும் அதேநேரம் மறுபுறத்தில் இன நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செற்படுவோம். அத்துடன் விகாரைகளின் புனர் நிர்மாணத்தின் போது தலதா மாளிகையின் தங்கத்திலான கூரையை ஆர்.பிரேமதாச நிர்மாணித்தார். எனவே தற்போது அதனை புனர் நிர்மாணம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
மேலும் நேபாளத்தில் அமைந்துள்ள புத்த பெருமானின் பிறப்பிடமான லும்பினிக்கு ஜப்பான் நிதி உதவி செய்தது. இந்நிலையில் ஜப்பானுக்கு பதிலாக முதற்தடவையாக நாம் 15 கோடி ரூபாவை அடுத்த வருடம் வழங்கவுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித் துள்ளோம் என்றார்.