(எம்.ஜே.எம்.சஜீத்)
20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் பறிபோவதை ஆதரிக்க முடியாது.
கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை
13வது திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரம் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில்தான் ஆளுனர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. 20வது அரசியல் திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் இதுவரை மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மாகாண சபைகளை கலைப்பதற்கான பணிந்துரை இல்லாமல் செய்யப்பட்டு மத்திய அரசாங்கத்தின் பாராளுமன்றத்திற்கு இவ்வதிகாரம் பறிபோகும் நிலைமை ஏற்படவுள்ளது.
எனவே, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் பறிகொடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு நாம் துனைபோக முடியாது என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டம் நேற்று(13.08.2017) தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரின் மக்கள் காரியாலயத்தில் நடைபெற்ற போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்....
13வது திருத்த சட்டத்தின் படி மாகாண சபைகளின் பெரும்பாலான உச்ச அதிகாரங்கள் பகிரந்தளிக்கப்பட வேண்டும் என வட கிழக்கு மாகாண மக்கள் கோரிக்கை விடுத்து வரும் இக்கால கட்டத்தில் 13வது திருத்த சட்டத்தில் உள்ளவற்றையும் மத்திய அரசாங்கத்திடம் வழங்கும் இம் முயற்சிக்கு நாம் கண்களை மூடிக் கொண்டு ஆதரவு வழங்க முடியாது.
கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாணங்களின் காலங்களை 2 வருடங்களுக்கு நீடிக்க வேண்டும், இப்போது பதவிகளில் இருப்பவர்கள் தொடர்ந்தும் பதவிகளில் இருக்க வேண்டும் முதலமைச்சர் பதவி எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற சுயநல எண்ணங்களை விட நமது மாகாண சபைகளிடம் இருந்த அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்குகின்ற வரலாற்று துரோகத்தை இழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டிற்கு குறிப்பாக வட கிழக்கு அரசியல் கட்சிகளின் தலைமைகளும், மாகாண சபைகளின் மக்கள் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும்.
இரண்டு வருடங்கள் கால நீடிப்புதான் வேண்டும், மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் பறிபோவதால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை என்ற மனோநிலைமையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
அன்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது ஒரு சிலரின் வேண்டுகோளுக்கிணங்க ஆட்சியோடு மாகாண சபையின் ஆட்சிக்காலத்தை 02 வருடங்கள் நீடிப்பதாக தெரிவித்தார். இதேவேளை அதி கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற் சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரிய நேரத்தில் மாகாண சபைகளை கலைத்து தேர்தல்கள் நடாத்தப்படும் என தீர்மாணிக்கப்பட்டது. அத் தீர்மானத்தினை தேர்தல் ஆணையாளர், பிரதமருக்கும் அனுப்பிவைப்பதாக செயல்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஆளும் கட்சியில் நாம் இருந்தாலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் இவ்வாரான நமது அதிகாரப் பறிப்பினை எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு நம் எல்லோர்க்கும் உள்ளது.
கடந்த அரசாங்கத்தில் கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சியில் அமைச்சர்களாக இருந்த போதும் கடும் போக்காளர்கள் உள்ள நிலையிலுமத் பிரதேச சபை திருத்தச் சட்ட மூலம், நாடு நகர திருத்தச் சட்ட மூலம் என்பதனை தியாகத்துடன் எதிர்கொண்டு கிழக்கு மாகாண சபை ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இச் சட்ட மூலங்கள் ஊடாக சிறுபான்மை மக்களுக்கு ஏற்படும் அநியாயங்களுக்காக குரல் கொடுத்து மத்திய அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பிய வரலாறு கிழக்கு மாகாண சபைக்கு உள்ளது. இதனால் முழு இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படவிருந்த அநியாயங்களை தடுத்து நிறுத்தினோம். அதேபோல் 20வது அரசியல் சரத்தினால் நமது மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசிடம் பறிபோவதை எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.
தேசிய காங்கிரஸ் எப்போதும் நமது சமூகத்தின் நலனுக்காக யதார்த்தபூர்வமான கருத்துக்களை வெளிப்படையாக மக்கள் மத்தியில் தெரிவிக்கும் கட்சியாகும். நமது மக்களின் நலனுக்காக தேசிய காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக தேசிய காங்கிரஸ் கட்சியின் புனரமைப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.