எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அணியினர் ஆட்சிக்கு வரலாம் என்ற தொனியில் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன நேற்று கருத்து வெளியிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (16) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்
சந்திப்பில் ஊடகவிலயாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்:-
ஒன்று அல்லது இரண்டு மேல் நீதிமன்றங்களை ட்ரயல் அட்பார் நீதிமன்றங்களாக மாற்றி கடந்த ஆட்சியாளர்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை முன்னெடுக்கவேண்டும்.
2020 ஆம் ஆண்டு வரை இதனை இழுத்தடிப்பதற்கு இடமளிக்க முடியாது. அப்படி 2020 ஆம் ஆண்டு வரை இந்த விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டால் அதன்பின்னர் மஹிந்தவுக்கு எதிரான குற்றச்சாட்டை மஹிந்தவே விசாரணை செய்யும் நிலைமை ஏற்பட்டுவிடலாம்.
கேள்வி: அப்படியானால் 2020 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரலாம் என்று கூறுகிறீர்களா?
பதில்: ஒரு விடயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாங்கள் ஆட்சிக்கு வராவிடின் அவர்கள்தான் ஆட்சிக்கு வருவார்கள். இல்லாவிடின் ஜே.வி.பி.யால் ஆட்சிக்கு வரமுடியுமா? நாம் யதார்த்தத்தையும் புரிந்துகொள்ளவேண்டும்.
கேள்வி: மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது. ?
பதில்: அப்படி இல்லை மாகாணசபைத் தேர்தல்களை ஒரே தரத்தில் நடத்தவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. இது தொடர்பில் நாங்கள் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கிறோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவே முயற்சிப்போம். மாகாணசபைத் தேர்தலை ஒரே நாளில் நடத்தவேண்டும் என்பதே எமது நோக்கம். குறிப்பாக மாகாணசபைத் தேர்தலையும் உள்ளூராட்சித் தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கே ஆராய்கின்றோம். அதேபோன்று பாராளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கு ஆராய்கின்றோம்.
கேள்வி: இவை எல்லாவற்றுக்கும் முன்னர் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது குறித்து நீங்கள் கருத்து வெளியிட்டீர்களா?
பதில்: இந்தத் தேர்தல்களுக்கு முன்னர் உண்மையில் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதே சிறப்பாக இருக்கும். காரணம் நான் இதுதொடர்பில் ஜனாதிபதியிடமும் பேசினேன். அவரும் சர்வஜன வாக்கெடுப்பு குறித்து ஆராயவேண்டும் என்று கூறினார்.
கேள்வி: சர்வஜன வாக்கெடுப்பை சுதந்திரக்கட்சி எதிர்க்கின்றதே?
பதில்: சுதந்திரக்கட்சி எதிர்காது என்றே கருதுகின்றேன். சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதன் மூலம் சுதந்திரக்கட்சிக்கே அதிக நன்மை இருக்கிறது. இன்று சர்வஜன வாக்கெடுப்பை ஐக்கியதேசியக்கட்சியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் கோரிநிற்கின்றன. எதிர்ப்பதாயின் மஹிந்தமட்டுமே இதனை எதிர்ப்பார். எனவே அனைவரும் விரும்பி நிற்கின்றபோது சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே சிறந்ததாக அமையும்.