(க.கிஷாந்தன்)
கதிர்காமத்திலிருந்து, நுவரெலியா வலப்பனை வழியாக மிஹிந்தலை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா மினி பஸ் ஒன்று வலப்பனை நுவரெலியா பிரதான வீதியில் மாஹாஊவாபத்தன பகுதியில் குடைசாய்ந்துள்ளது.
மிஹிந்தலை பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு கதிர்காமத்திற்கு சென்று மீண்டும் மிஹிந்தலைக்கு செல்லும் வழியிலேயே குறித்த பஸ் 13.08.2017 அன்று இரவு 8 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 21 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர் .
சீரற்ற காலநிலை காரணமாகவும், பஸ் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவும், இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 21 பேரில் 15 பேர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையிலும், 6 பேர் வலப்பனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பில் வலப்பனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.