தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் யோசனைக்கமைய 2 உத்தியோகபூர்வ மொழிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கற்பிக்கும் வகுப்பின் அறிமுக (Orientation) நிகழ்வு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 40 உறுப்பினர்கள் மாத்திரமே பதிவு செய்துள்ள அதேவேளை, நேற்றைய அறிமுக நிகழ்வுக்கு 12 உறுப்பினர்கள் மாத்திரமே வருகை தந்துள்ளனர்.
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் சந்தன அருணதேவ மற்றும் பணிப்பளார் நாயகம் பிரசாத் ஆர். ஹேரத் ஆகியோரின் பங்குபற்றலில் இந்த அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.
அறிமுக நிகழ்வுக்கு 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே பங்குபற்றியுள்ளமை பரிதாபமான நிலைமை என தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பளார் நாயகம் பிரசாத் ஆர். ஹேரத் இதன்போது கவலை வெளியிட்டுள்ளார்.
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் மூலம் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது அனைத்து கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
விசேட பயிற்சிகளுடன் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த மொழிப்பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு வரமும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை பாராளுமன்றத்தில் நடைபெறும்.
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சிங்களம் மற்றும் தமிழ் மொழி வளவாளர்களால் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது