வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. நேரடி வரியை 40 வீதமாக அதிகரிப்பதுடன் மறைமுக வரியை 60 வீதமாக குறைக்கும் திட்டம் எம்மிடம் உள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளல் இந்த நிவாரணத்தை மக்கள் உணர முடியும். அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என நிதி பிரதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
விகாரை, கோவில், பள்ளி, ஆலயம் ஆகியவற்றின் புண்ணிய நிதியில் எந்த வரியும் அறவிடப்படாது எனவும அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இறைவரிச் சட்டமூலம் நாளை (இன்று ) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பிலான வாக்கெடுப்பு அடுத்த பாராளுமன்ற அமர்வில் நடத்தப்படவுள்ள நிலையில் இது குறித்த திறந்த விவாதத்தை நடத்த முடியும். பொது மேடைகளில் சட்டமூலம் குறித்து கருத்து வெளியிடும் நபர்கள் பாரளுமன்றத்தில் பொது விவாதத்தில் கலந்துகொண்டு முரண்பாடுகளை தெரிவிக்க முடியும். அரசாங்கம் என்ற வகையில் விவாதத்தை நடத்த நாம் தயாராக உள்ளோம். எனவே இதன் மூலமாக குழப்பங்களை தெளிவுபடுத்த முடியும்.
நாம் அரசாங்கம் அமைத்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதுவரை நாட்டில் நெருக்கடியான பொருளாதார கொள்கை ஒன்றே காணப்பட்டது. கடந்த ஆட்சியின் போது முன்வைக்கப்பட்ட நெருக்கடி நிலை பொருளாதார கொள்கைக்கு மாறாக நாம் பல்வேறு மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். கடந்த கால கடன்கள், முறையற்ற பொருளாதார உடன்படிக்கைகள் என்பன எமது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தை பலவீனப்படுத்தியுள்ளன.
எனினும் நாம் கடந்த கால கடன்களை செலுத்தி வரும் நிலையில் எதிர்காலத்தில் கடன்களை சரியாக பூர்த்தி செய்யும் ஸ்திரமான வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளோம். குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுக திட்டம் மூலமாக 400 பில்லியன் டொலர் இலாபம் கிடக்கும் வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.
எனினும் இன்று ஆசிய நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மை வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதார உறுதித்தன்மை வீழ்ச்சியை காட்டுகின்றது. ஆகவே இதன் தாக்கம் இலங்கையையும் பெருமளவில் பாதிக்கும் என்பது தெரிந்த விடயமேயாகும். எனினும் அரசாங்கத்தின் சரியான பொருளாதார கொள்கை மூலமாக எம்மால் சில நிவாரணங்களை வழங்க முடியுமாகியுள்ளது. குறிப்பாக சாதாரண மக்களை இலகுவாக சென்றடையும் வகையில் சாதாரண வாகனங்களின் விலைகளின் மாற்றங்களை கொண்டுவந்துள்ளமை மற்றும் அனைவரும் இன்று இணையங்களின் பாவனையில் உள்ள நிலையில் அதற்கான வசதிகளை பெற்றுகொடுத்தமை ஆகியவற்றை கூறலாம்.
அதற்கு அப்பால் மேலும் சில முக்கிய மாற்றங்களை கொண்டுவரவேண்டிய தேவை உள்ளது. வரி திட்டத்திலும் மாற்றங்களை கொண்டுவர வேண்டிய கட்டாயம் உள்ளது. இலங்கையில் நேரடி வரியை விடவும் மறைமுக வரியே அதிகமாக அறவிடப்படுகின்றது. இலங்கையில் சாதாரண மக்களிடம் அறவிடப்படும் மறைமுக வரியே (82 வீதம் ) அதிகமாக அறவிடப்படுகின்றது. நேரடி வரியாக 18வீதம் அறவிடப்படுகின்றது இந்த தொகை அதிகரிக்கப்பட வேண்டும். நேரடி வரியை 40 வீதமாக அதிகரிப்பதுடன் மறைமுக வரியை 60 வீதமாக குறைக்கும் திட்டம் எம்மிடம் உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிவாரணத்தை மக்கள் உணர முடியும்.
விகாரை, கோவில், ஆலயங்கள், பள்ளிவாசல் ஆகியவற்றில் புண்ணிய காரியங்களில் கிடைக்கும் நிதியில் எந்த வரியும் அறவிடப்போவதில்லை. இதில் ஆலய நிர்வாகம் சந்தேகங்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும். இதில் மாற்று கருத்துகள் இல்லை. அனைவருக்கும் சமமான சட்டம் நீதி முன்னெடுக்கப்படும். சாதாரண மக்களுக்கு மட்டுமே அதிக வரி அறவிடுவதும் செல்வந்த பிரபுக்கள் வர்க்கம் குறைந்த வரி செலுத்துவதும் ஏற்றுகொள்ள முடியாத விடயமாகும் என்றார்.