கிழக்கு மாகாணத்தில் 45 வயதையடைந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கும் அரச துறைகளில் நியமனம் வழங்குவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் இணங்கியுள்ளதாக மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்கும் இடையில் ஆளுநர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் கடந்த கால யுத்தம் காரணமாக காலந்தாழ்த்தி தமது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இவர்களுக்கான நியமன வயதெல்லையை 45 வரை அனுமதிக்க ஆளுநர் இணங்கிக் கொண்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மிக நீண்ட நேரம் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தில் 40 வயதைக் கடந்து தமது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து தொழிலின்றி இருக்கும் சுமார் 70 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் அக்கறை செலுத்தியிருந்தார்.
வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால், போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவிருக்கின்றது.
இதற்காக 40 வயது வரையான பட்டதாரிகளுக்கு மட்டுமே நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச்சேவை ஆணைக்குழு, மற்றும் மாகாண கல்வி அமைச்சுக்கு ஆளுநர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஆனால் முதலமைச்சர் ஆளுநரோடு மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து, 45 வயது வரையான வேலையற்ற பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் மாகாண கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.