சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு உதவும் வகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவிருப்பதாக சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் சாந்த பண்டார தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்து கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஏழு உறுப்பினர்களும் அரசுடன் இணைய விருப்பம் தெரிவித்திருப்பதாக சு.க தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சாந்த பண்டார குறிப்பிட்டார்.
கூடிய விரைவில் ஏழு பேர் இணைந்துகொள்ளவிருப்பதுடன், அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், ஏழு பேரினதும் பெயர்களை அறிவிப்பதற்கான சூழல் கனியவில்லையென்றும் கூறினார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் சு.க உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன உள்ளிட்ட எந்தவொரு கட்சியிலும் உறுப்புரிமையைப் பெறமாட்டார்கள். எனவே அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை.
"ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆட்டங்கண்டுள்ளது. அவர்களுக்கிடையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளது" என்றும் சாந்த பண்டார கூறினார். இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட பக்கச்சார்பற்ற, சுதந்திரமான கணக்கெடுப்பின்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிஹேனவுக்குகான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கணக்கெடுப்பில் கலந்துகொண்டவர்கள் இதனைத் தெளிவாகக் காண்பித்துள்ளனர்.
நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல்களுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு ஜனாதிபதியே காரணம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.
உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தைத் திருத்துவதாலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி இதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் தேர்தல்களை நடத்த முடியும் என்றார்.
பாரத லக்ஷ்மன் படுகொலை செய்யப்பட்ட 2012ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களின் போது, புதிய தேர்தல் முறைமையொன்று அவசியம் என மக்கள் கோரிக்கைவிடுத்திருந்தனர்.
குறிப்பாக விருப்புவாக்கு முறையில் மாற்றம் வேண்டும் என மக்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, சு.க செயலாளர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் மத்திய குழு கவனம் செலுத்தும் என்றார்.