Top News

இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் கட்டார்

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய 4 நாடுகள் கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி முதல் முறித்துக்கொண்டன.
தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக பணஉதவி செய்வதாகவும், எதிரிநாடான ஈரானுடன் உறவு வைத்திருப்பதாகவும் கூறி கத்தாருக்கு இந்த தடை விதிக்கப்பட்டது. மேலும் கத்தாரில் இருந்து மேற்கண்ட நாடுகளின் தூதர்களும் அந்தந்த நாடுகளுக்கு திரும்பினர்.
மேலும் கத்தார் விமானங்கள் அந்தந்த நாட்டின் வான் எல்லையில் பறக்க தடை விதிக்கப்பட்டது. கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் கத்தார் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்டை நாடுகளின் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளால் நெருக்கடிக்கு ஆளான கத்தார், இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் கத்தார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கத்தார் சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த அறிவிப்பால் வளைகுடா நாடுகளில் கத்தார் மிகவும் திறந்த வெளி நாடாக திகழும் என்றார்.
இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அரபு நாடுகளில் லெபனான் மட்டும் தான் இந்த 80 நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
Previous Post Next Post