எம்.ரீ. ஹைதர் அலி
நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான கௌரவ. அல்ஹாஜ். சட்டத்தரணி றவூப் ஹக்கீம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் கல்குடா பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 13.08.2017ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான அல்ஹாஜ். கணக்காளர் எச்.எம்.எம். றியாழ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கல்குடா பிரதேசத்தில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர் றவூப் ஹக்கீம் தனது அமைச்சினூடாக நிதியொதுக்கீடு செய்துள்ளார்.
கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச உள்ளக கொங்ரீற்று வீதிகளுக்கு ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபாவும், ஓட்டமாவடி சுற்று வட்டத்திலிருந்து வாழைச்சேனை வீதியை கார்பெட் வீதியாக மாற்றுவதற்கு ரூபா ஐந்து கோடி ரூபாவும், மாஞ்சோலை-மீராவோடை வெள்ளத்தடுப்புச்சுவர் அமைப்பதற்காக ஒரு கோடி ரூபாவும், காவத்தமுனை பிரதேசத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு ஐம்பது இலட்சம் ரூபாவும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கல்குடா, வாழைச்சேனை, சித்தாண்டி பிரதேசத்திற்கான இரண்டாம் கட்ட குடிநீர் வழங்களுக்கான வேலைகள் நூறு மில்லியன் ரூபா செலவிலும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அத்துடன், ரூபா 9835.84 மில்லியன் செலவில் ஆரம்பிக்கப்படவுள்ள பாரிய வாழைச்சேனை கல்குடா நீர் வழங்கல் திட்டம் தொடர்பிலான விஷேட அமர்வும் இதன் போது இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் அல்ஹாஜ். எச்.எம்.எம். றியாழ் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வுகளில் பிரதம அதிதியாக நகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான கௌரவ. அல்ஹாஜ். சட்டத்தரணி றவூப் ஹக்கீம் அவர்களும், கௌரவ அதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. அல்ஹாஜ். ஹாபிஸ் நஸீர் அஹமட், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. அல்ஹாஜ். அஷ்ஷெய்யித் அலிஸாஹிர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ. அல்ஹாஜ். பொறியியலாளர் ஷிப்லி பாறூக் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அமைச்சின் இணைப்புச்செயலாளர் முபீன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.