Top News

விமலின் கட்சி விலகினாலும் அரசியலமைப்பு சபை கூடுவதற்கு தடையில்லை

தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபையில் இருந்து விலகினாலும் முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக செயற்பட எந்தத் தடையும் கிடையாதென சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இது தொடரபில் சட்ட ஆலோசனையை தான் பெற்றதாகவும் 5 எம். பி. க்கள் விலகுவது சபைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் கூடியது. இதன் போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த விமல் வீரவன்ச எம். பி. அரசியலமைப்பு நிர்ணய குழுக்களில் இருந்து தமது குழு விலகுவதாக அறிவித்துள்ளதால் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக கருத முடியாது என்றார். இது தொடர்பில் சபாநாயகரின் முடிவை அறிவிக்குமாறு அவர் கோரினார்.
இதற்குப் பதிலளித்த போதே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார்.
ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த விமல் வீரவன்ச எம். பி. :அரசியலமைப்பைத் திருத்துவதற்காக முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. நாம் அரசியலமைப்பு நிர்ணய சபையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளோம்.
இந்த நிலையில் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு நிர்ணய சபையாகக் கருத முடியாது. ஏனெறால் 225 எம். பி.க்களும் உள்ளடங்கினாலே முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற முடியும். 5 எம். பிக்கள் இதிலிருந்து விலகியுள்ளதால் இனியும் முழு பாராளுமன்றத்தையும் அரசிலயமைப்பு சபையாக இயங்க முடியாது என்று குறிப்பிட்டார்.
இதை அடுத்து கருத்து வெளியிட்ட சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல: பாராளுமன்றம் கூடும் போது பங்கேற்கும் எம். பிக்களின் எண்ணிக்கையே முழுப்பாராளுமன்றமாகக் கருதப்படுகிறது. இதுவே அரசியலமைப்பு சபையாகவும் கருதப்படுகிறது. மாறாக 225 எம். பிக்களும் இருக்க வேண்டும் என்பதில்லை என்றார்.
அவ்வாறானால் 3, 4 எம். பிக்கள் இருந்தாலும் முழு பாராளுமன்றமும் அரசயிலமைப்பு சபையாகக் கருதப்படுமா என விமல் வீரவன்ச எம். பி. கேள்வி எழுப்பினார்.
தேசிய சுதந்திர முன்னணி எம். பிக்கள் விலகுவதால் பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக கூடுவதற்கு எந்த இடையூறும் கிடையாது என சபாநாயகர் அறிவித்தார். தான் இது தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
Previous Post Next Post