(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இன்று (17) வியாழக்கிழமை காலை கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை, சமூர்த்தி தலமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர். சாலிஹ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர். அமீர், ஏ.எல்.எம். முஸ்தபா, எம்.எஸ். உமர் அலி, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், ஏ.எம். றினோஸ் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் விளக்கமளித்தனர்.
மேலும் தனியார் நிறுவனத்தினால் கல்முனை மாநகர பிரதேசத்தில் வழங்கப்படுகின்ற கேபில் தொலைக்காட்சியினால் கலாசார சீரழிவு ஏற்படுவதாகவும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு மின்கம்பங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கம்பங்களில் அவர்களின் கேபில்கள் அனுமதி பெறப்படாத நிலையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்தின் செயற்பாட்டை தடைசெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டு அந்நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் தொடர்பில் இரகசிய பொலிசார் ஆராய்ந்து அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
அத்தோடு கல்முனை சந்தாங்கேணி நுழைவாயில் பிரதேசத்தில் அனுமதியற்றமுறையில் கட்டடங்களை அமைத்திருப்பது எதிர்காலத்தில் குறித்த மைதானத்தின் அபிவிருத்தி செயற்பாட்டின்போது தடையாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் தற்காலிக கூடாரங்களில் மாத்திரமே வியாபார நடவடிக்கைகளை தற்காலிகமாக மேற்கொள்ள முடியும் எனவும் ஏனைய அனுமதிக்கப்படாத நிரந்தர கட்டடங்களை அகற்றுவதற்கும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மருதமுனை பிரான்ஸ் சிட்டி வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகளை இனங்கண்டு அவற்றை பிரதேச செயலகத்திற்கு தெரியப்படுத்தும் பொறுப்பு மருதமுனை ஜம்இயத்துல் உலமா சபை மற்றும் பள்ளிவாசல் நிருவாகத்தினருக்கும் வழங்கப்பட்டிருந்தபோதிலும் இதுவரை குறித்த பயனாளிகள் தொடர்பான பட்டியல் வழங்கப்படாமையினால் குறித்த அதிகார பொறுப்பினை இரத்துச் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு மருதமுனை பிரான்ஸ் சிட்டி மற்றும் கல்முனை கிறீன்பீல்ட் வீட்டுத்திட்டங்களில் பகிரந்தளிக்கப்படாமல் காணப்படும் வீடுகளை கல்முனை பிரதேச செயலகம் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை மருதமுனையில் அமைக்கப்படவுள்ள பீச்பார்க்கிற்கான காணியினை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு முஸ்லிம் தமிழ் நல்லுறவை மேம்படுத்தும்வகையில் இஸ்லாமபாத் வாடிவீட்டு பிரதேசத்தில் பீச்பார்க் ஒன்றை அமைக்கும்வகையில் காணி ஒதுக்கீடுகளை மேற்கொள்வது தொடர்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.