Top News

மனோ கனேசன் அமைச்சா் பைசா் முஸ்தபா சந்திப்பு உள்ளுராட்சிக்கான கோவை கையளிப்பு


பொதுமக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய சக்தியாக சமுர்த்தி திட்டம் மாறியுள்ளது. அதனை கடந்த காலத்தை விடவும் மேலும் பலப்படுத்தி முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் பொறுப்புக்களை குறைவின்றி நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (23) முற்பகல் கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெற்ற சமுர்த்தி சமூக பலம் – 2017 தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டிய அனைத்து சமூகங்களையும் பலப்படுத்தும் திட்டங்களுக்கு தற்போதைய அரசாங்கம் புதிய உயிரோட்டத்தையும், உற்சாகத்தையும் வழங்கியிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பொதுமக்களின் நன்மைக்காக சமுர்த்தி திட்டத்தை மேம்படுத்துவதற்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிறப்பான செயற்திட்டங்களை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள ஏழு மாவட்டங்களில் மட்டுமே சமுர்த்தி திட்டம் வெற்றிகரமாக இயங்கி வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சமுர்த்தி திட்டம் வெற்றிபெறாத வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் திட்டத்தை வெற்றிபெற செய்வதற்காக துறையிலுள்ள அனைவரினதும் அறிவு, அனுபவம் மற்றும் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
09 மாகாணங்களிலும் பல்வேறு அரசியலமைப்பு நிலைமைகள் இருந்த போதிலும் மதிப்புமிக்க நாடு என்ற வகையில் முழு நாட்டையும் ஒரே மாதிரியாக கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் கொள்கையென தெரிவித்த ஜனாதிபதி, நீண்டகால போர் காரணமாக அபிவிருத்தியில் பின்னடைந்துள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஆளணியினரை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் முறைமைப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
உள்நாட்டு பொருளாதார கொள்கைகளை அமுல்படுத்தும்போது சமுர்த்தி திட்டத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறிய கருத்திட்டங்களை பிரதேச கருத்திட்டங்களாக மாற்றி, தேசிய மட்டத்துக்கு கொண்டுவந்து, வெளிநாட்டு சந்தை வரை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நான்கு சமுர்த்தி சமூக மட்ட பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி பரிசில்களை வழங்கினார்.
சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலையக மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அமைச்சின் செயலாளர் ஷிராணி வீரக்கோன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் நீல் பண்டார ஹப்புகின்ன, சமுர்த்தி சமூக மட்ட வங்கி மகாசங்க தலைவி ஆர்.ஏ.சித்ராணி ரணதுங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 
Previous Post Next Post