Top News

வார்த்தை போர்! அமெரிக்காவின் முயற்பாடுகளை கவனிக்க வடகொரியா தீர்மானம்


அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியமான குவாம் தீவு மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆய்வு நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாம் மீது தாக்குதல் நடத்தப் போவதாக கடந்த வாரம் வடகொரியா அறிவித்ததை அடுத்து, பதற்றம் அதிகரித்தது.
வடகொரியாவில் இருந்து தற்போது கிடைக்கும் தகவல்கள், அதிகரித்து வரும் வார்த்தைப் போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
குவாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் திட்டத்தை கிம் ஜான்-உன் நீண்ட நேரம் ஆய்வு செய்ததாகவும், மூத்த இராணுவ அதிகாரிகளுடன் ஆய்வு செய்ததாகவும் வடகொரிய அரசு செய்தி முகமையான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
`குவாம் மீது சுற்றி வளைத்திருக்கும் நெருப்பு வளையத்துக்கான தயாரிப்புகள்’ முடிவடைந்துள்ள நிலையில், வடகொரியாவின் கேந்திரப் பாதுகாப்புப் படை கமாண்டர், தாக்குதல் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார்.
அதே நேரத்தில், எந்த முடிவு எடுப்பதற்கும் முன்னதாக, அமெரிக்காவின் செயல்பாடுகளைக் கவனிக்க வடகொரியத் தலைவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இது, ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தணிக்க உதவும் என கருதப்படுகிறது.
தாற்காலிகமாக நிறுத்தி வைக்கும் பட்டனை அழுத்த கிம் ஜாங்-உன் முடிவு செய்திருப்பதாகக் கூறும், சோலில் உள்ள பிபிசி செய்தியாளர் யோகிதா லிமயே, வடகொரியா போன்ற இரகசியமான ஒரு நாட்டில், எதையும் உறுதியாகச் சொல்லி விட முடியாது என்கிறார்.
வடகொரியா, தாக்குதலுக்கு இன்னும் முழுமையாகத் தயாராகாத நிலையில், காலம் கடத்துவதற்காகவே இத்தகைய உபாயத்தைக் கையாளலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அண்டை நாடுகள் சொல்வது என்ன?
தென் கொரியாவும், வடகொரியாவின் நெருங்கிய ஒரே கூட்டாளியான சீனாவும், பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன.
கொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா தன்னிச்சையாக செயல்படக் கூடாது என செவ்வாய்க்கிழமையன்று தென்கொரிய அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
 தென் கொரியா – அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கையின்படி, அன்னிய சக்திகளால் இரு தரப்பில் யாருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் ஒருவருடன் மற்றொருவர் கலந்தாலோசித்து செயல்பட வேண்டும்.
சீனாவின் நிலைப்பாடு
அமெரிக்காவும், தென்கொரியாவும், இராணுவப் பயிற்சியை நிறுத்த வேண்டும் என்றும், அதற்கு ஈடாக வடகொரியாவும் தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற யோசனையை சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சீனா சமரசத் தூதராக செயல்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
என்ன சொல்கிறது அமெரிக்கா?
 அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,
குவாமை நோக்கி பியாங்யாங் ஏவுகணை வீசினால், `விளையாட்டு ஆரம்பமாகி விட்டது’ என்று முடிவு செய்து விடலாம் என்றார்.
அமெரிக்க இராணுவம், தன் நாட்டின் மீதான எத்தகைய தாக்குதலையும் எந்த நேரத்திலும் எந்தப் பகுதியிலிருந்தும் எதிர்கொள்ளும் திறன் படைத்ததாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சுமார் 1,60,000 மக்கள் வாழும் குவாம் தீவில் அமெரிக்க இராணுவத் தளம் உள்ளது. அந்த மக்களின் பாதுகாப்புக்கு தாங்கள் உத்தரவாதம் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post