( ஐ. ஏ. காதிர் கான் )
இம்முறை க.பொ.த. (உ/த) பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பரீட்சை எழுதும் சமயத்தில், பர்தா உடை அணிந்து எழுதுவதற்கான ஒழுங்குகளைச் செய்து கொடுக்குமாறும், இது தொடர்பில் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு முன் கூட்டியே சரியான அறிவுறுத்தல்களை வழங்குமாறும், இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்திடம் முஸ்லிம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வருடங்களில் க.பொ.த.(உ/த) மற்றும் (சா/த) பரீட்சைகளை பர்தா உடை அணிந்து எழுதவந்த மாணவிகளை, பரீட்சைகள் எழுதவிடாமல் தடுக்கப்பட்ட சம்பவங்கள், நாட்டின் ஒருசில பரீட்சை மண்டபங்களில் இடம்பெற்றிருந்ததையும், இதனால் மாணவிகள் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு, அவர்களின் பெறுபேறுகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததையும், இதன்போது பெற்றோர் உள்ளிட்ட கல்விச் சமூகம் தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தமையையும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முஸ்லிம் கலாசார ஆடைகளோடு பரீட்சைகள் எழுத முடியும் என, பரீட்சைகள் தொடர்பான விளக்கக் கூட்டங்களின்போது தெளிவுபடுத்தப்பட்டு, சுற்றறிக்கைகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில், ஒரு சில பரீட்சை மண்டபங்களில் கடமை புரிகின்ற சில அதிகாரிகள், தான் தோன்றித்தனமாக இவ்வாறு இனவாத மனப் போக்கில் நடந்து கொள்கின்றனர். இதனால், மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, முஸ்லிம் மாணவிகளது கலாசார ஆடையான பர்தாவுடன் பரீட்சை மண்டபத்திற்குச் சென்று, பரீட்சை எழுதும் சமயத்தில் எவ்வித இடையூறுகளும் விளைவிக்க வேண்டாம் என, பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுவதோடு, இது விடயத்தில் பரீட்சைத் திணைக்களமும் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
க.பொ.த. (உ/த) பரீட்சை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல், 31 ஆம் திகதி வரை, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.