Top News

திருக்கோவில் பிரதேச செயலகம் முற்றுகை

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகத்தில், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், இன்று (14) காலை இடம்பெற்றுக் கொண்டு இருந்த வேளை, முத்திரைகள் நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்து, பிரதேச செயலகத்தை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குறித்த கூட்டம், இணைத்தலைவர்களின் தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் ஆவேசத்துடன் சத்தமிட்டுக் கொண்டு அலுவலகத்துக்குள் நுளைந்தனர்.
இந்நிலையில், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை இடைநிறுத்தி விட்டு, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எஸ்கே.பண்டார, பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் மற்றும் அதிகாரிகள் எழுந்து வந்து, மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தினர்.
“சமுர்த்தி பெறுபவர்களில் சிலர் தகுதியற்றவர்களாகக் காணப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பயனாளிகளின் பட்டியலைச் சரி செய்து, சுற்றுநிருபத்துக்கு அமைவாக தகுதியான மக்களுக்கு முத்திரைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மாத்திரமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர, இதுவரையில் யாருடைய சமுர்த்தி கொடுப்பனவு முத்திரைகளும் நிறுத்தப்படவில்லை. ஏதும் முறைப்பாடுகள் இருப்பின் அதனை எழுத்து மூலம் வழங்குங்கள்” என, திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் இதன்போது பொதுமக்களிடம் தெரிவித்தார்.
அத்துடன், இப்பிரச்சினைக்கான தீர்வை விரைவில் பெற்றுத் தருவதாகவும் நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாகத் தான் கதைக்கவுள்ளதாகவும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்தார்.
இதனையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து களைந்து சென்றதுடன், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமும் இடம்பெற்றது.

Previous Post Next Post