இலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவுகளை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாக கனடா அறிவித்துள்ளது. வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று பிலிப்பைன்ஸில் இடம்பெற்றுள்ளது.
பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் தற்போது நடைபெற்று வரும் 24 ஆவது ஆசியான் மாநாட்டு கலந்துரையாடலின்போதே இருவருக்குமிடையே உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போதே கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நான் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதல் தடவையாக இலங்கையுடன் உயர்மட்ட அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். ஆக்கபூர்வமான அடிப்படையில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முயற்சி எடுக்கப்படும். இதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் நடவடிக்கைகள், நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் போன்றன அபிவிருத்திக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளன. இந்நேரத்தில் கனடாவின் ஒத்துழைப்பு, இருநாட்டு தொடர்புகள் மிகவும் பலமுள்ளதாக அமையும் என்றார்.