Top News

வடக்கு முதலமைச்சருக்கு கூட பட்டதாரி நியமனங்களை பெற்றுக் கொடுக்க முடியாமல் போயுள்ளது - அமைச்சர் ரமேஷ்வரன் தெரிவிப்பு


(க.கிஷாந்தன்)

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் வடக்கு கிழக்கில் போராட்டங்கள் செய்யப்பட்டு வந்த போதிலும் மத்திய மாகாணத்தில் போராட்டங்களின்றி 742 பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப்பட்டது. ஆனால் பட்டதாரிகள் நியமனங்கள் வழங்கப்பட்டும் ஆசிரியர்கள் பலர் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கவில்லை என்பது வேதனைக்குரியது என மத்திய மாகாண தமிழ் கல்வி மற்றும் விவாசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.

Race For Education திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான “இந்து விழி” கணித பாட பயிற்சிக் கையேடு வெளியீட்டு விழா  கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் 18.08.2017 அன்று நடைபெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித பாடத்தில் சித்தியை உயர்த்தும் நோக்கில் யாழ். இந்து கல்லூரியின் 1992ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் முன்னெடுத்து வரும் இந்த Race For Education திட்டத்தின் மத்திய மாகாண இணைப்பாளர் பொன்னம்பலம் பிரதீபன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மத்திய மாகாண தமிழ் கல்வி மற்றும் விவாசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எ.சத்தியேந்திரா, கோட்ட கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் கேட்டுக் கொண்டதற்கமைவாக இந்த பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் எமக்கு கிடைக்கபெற்றது.

2000த்திற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க சந்தர்ப்பம் இருந்த போதிலும் 742 பட்டதாரி ஆசிரியர்களே விண்ணப்பித்திருந்தார்கள். வடக்கு கிழக்கில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் கேட்டு பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்ற போதிலும், வடக்கு முதலமைச்சருக்கு கூட இந்த பட்டதாரி நியமனங்களை பெற்றுக் கொடுக்க முடியாமல் போயிருக்கின்றது.

ஆனால் மத்திய மாகாணத்தில் எந்தவொரு போராட்டங்களுமின்றி பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் கிடைத்துள்ளது. இவ்வாறு கிடைக்க பெற்ற நியமனங்களை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் பலர் பாடசாலைக்கு சமூகம் தரவில்லை.

வடக்கு கிழக்கில் பட்டடதாரி ஆசியரிகளுக்கு நியமனங்கள் வழங்க வேண்டும் என வழியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பட்டதாரிகளை 5 வருட ஒப்பந்த அடிப்படையில் மத்திய மாகாணத்தில் நியமனம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.


Previous Post Next Post