சுதந்திர கட்சியை சுயவிருப்பத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் கையளித்து விட்டு கட்சியிலிருந்து விலகிச் செல்ல முற்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கட்சியின் வளர்ச்சிக்கு முரணாக செயற்படுகின்றார். மஹிந்தவுக்கு தனது மகனான நாமல் ராஜபக் ஷவை ஜனா திபதி பதவியில் அமர்த்துவதற்கான தேவை இருக்கின்றது போலவே தெரிவதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹங்குராங்கெத்த பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு சுதந்திர கட்சி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் கட்சியை கையளித்துவிட்டு ஒருபுறமாகச் சென்று கட்சியின் ஒரு பிரிவினர் மாத்திரம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவது நியாயமானதல்ல.
அந்த தவறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே முன்னெடுக்கின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியொரு சுதந்திர கட்சி ஆட்சியினை அமைப்பதற்கு தனக்கு வலுச்சேருங்கள் என்றுதான் கோருகின்றார். அவ்வாறான சந்தர்ப்பத்தில் கட்சியையும் முன்னாள் ஜனாதிபதி தானாக முன்வந்து கையளித்துவிட்டு பின்னர் விலகிச் சென்று புறம்பேசுவதில் அர்த்தமில்லை.
காரணம் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத் தில் கையளிக்கும்போது மிக மகிழ்ச்சியுடன் கையளிக்கின்றேன் என்றே கூறினார். அதேநேரம் அரசாங்கத்துடன் இணைந்து கொள்கின்றபோதும் சகலரும் ஆதரவளித்தனர். சிறிதும் எதிர்ப்பு வரவில்லை. அதனால் இரு கட்சிகளும் தொடர்ந்தும் ஒருமித்து ஆட்சிசெய்ய வேண்டும் என்பதில்லை. இருக்கவும் போவதில்லை. தேர்தல் என்று வருகின்ற போதும் தனித்தே போட்டியிடுவோம். அதனால் கட்சியினை மேம்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ முட்டுக்கட்டையிடுகின்றார் என்றுதான் கூற வேண்டும்.
எவ்வாறாயினும் அவருக்கு சிறிது காலத்திற்கு ஜனாதிபதி பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த தேவையுள்ளது. அது அவரின் மகன் நாமல் ராஜபக் ஷவிற்கு ஜனாதிபதி பதவியை வழங்குவதற்கான முனைப்பாகவும் இருக்கலாம். அது தவறான ஒரு நோக்கம் என்பதை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.அதனால் கட்சி பிளவுபட்டுள்ளதில் தவறு ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்தில் இல்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பக்கத்திலேயே உள்ளது என்றார்.